பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1232

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“எனக்குப் பிடித்தது, எழுதினேன். எந்தப் புன்னகை என் பேனாவுக்கு உல்லாசமும், உற்சாகமும் தந்ததோ அந்தப் புன்னகையை நான் கெளரவிப்பதை அதன் உரிமைக்காரி கூட தடுக்க முடியாது.”

“நீங்கள் ‘மிட்டாபுரம் வள்ளல்களுக்கு நன்றியுடன்’ என்று ஒரு வரி எழுதினால் கூடப் போதும் என்று நானே சொல்லியிருந்தேனே?”

“உன் முதலாளிக்குப் புத்தகம் அனுப்பியிருந்தேனே? கிடைத்ததா? பார்த்தாரா?”

“கிடைத்தது, பார்த்தார். உடனே என்னைக் கூப்பிட்டு, மூன்று மாதச் சம்பளத்தையும் கையில் கொடுத்து, வேலையைவிட்டுப் போகச் சொல்லியும் ஆயிற்று”

“சபாஷ்... ஒரு கவியின் வாக்குக்கு எத்தனை சக்தி பார்த்தாயா ஓமனே?”

“நான் தெருவில் அநாதையாக நிற்பதில் உங்களுக்கு ஏன் இத்தனை சந்தோஷம்?”

“அநாதையாவது ஒன்றாவது? புலம்பாதே இன்று முதல் - இந்த விநாடி முதல் நீ என் அந்தரங்கக் காரியதரிசியாகிறாய்.”

“சம்பளம்…”

“நான் சம்பாதிக்கும் புகழ், பொருள், சுகம், துக்கம், மகிழ்ச்சி, இன்னல் எல்லாவற்றிலுமே சரி பாதி உனக்கு.”

“அப்படிக் கூட ஓர் உத்தியோகம் உலகத்தில் உண்டா? என்ன?”

“உண்டு ஓமனே! உலகத்தின் மிக மிகப் பழைய உத்தியோகம் அது. ‘சகதர்மிணி’ என்பது அந்த உத்தியோகத்தின் பெயர். பெண் தோன்றிய போதே அவளுக்கென்று ஏற்பட்டு விட்ட உத்தியோகம் அது.”

சொல்லி விட்டு ஓமனேயை நெஞ்சாரத் தழுவினார் கவிஞர் பிரேமதாசர்.

“இதுதான் இந்த உத்தியோகத்திற்கு ஜாயினிங் ரிப்போட்டாக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள் ஓமனே.

(அமுதசுரபி, தீபாவளி மலர், 1987)