பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1234 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

வேலை செய்யும் பெண்களுக்கான ஹாஸ்டல் ஒன்றில் தங்கிக் கொண்டிருந்த மாரியம்மாள் இங்கும் இதே வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. காலை 8 மணி வரை ஹாஸ்டலிலும் பின்பு எட்டரை முதல் ஐந்து வரை அலுவலகத்திலுமாக அவள் வேலை செய்ய வேண்டியிருந்தது. மறுபடி மாலை ஐந்தரை முதல் இரவு ஒன்பது, பத்து வரை ஹாஸ்டலில் வேலை சரியாயிருக்கும். அவளும் அந்த ஹாஸ்டலிலேயே 'செர்வண்ட்ஸ் குவார்ட்டர்ஸ்’ போன்ற ஒரு பகுதியில் தங்கிக் கொண்டதால் அங்கிருப்பவர்கள் நேரம் காலம் பார்க்காமல் வேலை ஏவினார்கள்.

எல்லாரும் மாரியம்மாளை ஒர் இயந்திரமாகச் சொன்னதைச் செய்ய ஒடியாடும் கருவியாகநினைத்தார்களே ஒழியத் தன்மானமுள்ள மனுவியாகவே நினைக்கவில்லை. அவளைப் பொருட்படுத்தவுமில்லை. அவளுக்காகக் கவலைப்படவுமில்லை. பயப்படவுமில்லை. எதை ஏவினாலும், எப்போது ஏவினாலும் செய்யக் கடமைப்பட்டவள் என்றே அவளைப் பற்றி எண்ணினார்கள். அலுவலகத்திலும், ஹாஸ்டலிலுமாக இரட்டை வருமானம் வந்தாலும் இரண்டிடங்களிலும் தன்னை யாரும் ஒரு சிறிதும் மதிக்கவில்லை என்பது உறுத்தியது. வேலியில்லாத பயிரைப் போலிருந்தாள் அவள் அலட்சியத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம். அவமானத்தை அப்படிப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.

அவள் வேலை பார்த்த அந்த அலுவலகத்தின் மூன்று மாடிகளிலுமாக அறுநூறு, எழுநூறு பேர் பணி புரிந்தாலும், தினசரி காலையில் அவள் தன் காரியங்களைத் தொடங்கும்போது வெறிச்சோடிக் கிடக்கும்.

அலுவலகத்தின் வாட்ச்மேனும் சார்ஜெண்ட்டும், அந்த வளாகத்திலேயே ஒரு மூலையில் குடியிருந்த சூப்பிரண்டெண்டும் தான் அவள் தன் பணியைத் தொடங்கும்பேர்து பார்க்க முடிந்தவர்கள்.

சூப்பிரெண்டெண்டு அவ்வளவாக நல்ல மனிதர் இல்லை. சார்ஜெண்டு, வாட்ச்மேன் எல்லாரும் சூப்பிரெண்டெண்டுக்கு அடங்கியவர்கள்.

ஒரு நாள் காலையில் மாரியம்மாள் முதல் மாடியைப் பெருக்கிச் சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்த போது, சார்ஜெண்டும் வாட்ச்மேனும் வந்தார்கள். அவளை நைச்சியமாக வேண்டினார்கள்:

“இந்தா மாரியம்மா! சூப்பிரண்டெண்டு ஐயா வீட்டிலே எல்லாரும் ஒரு கல்யாணத்துக்காக வெளியூர் போயிருக்காங்க. ஐயா மட்டும்தான் இருக்காரு. சிரமத்தைப் பாராமே, பெருக்கிச் சுத்தம் பண்ணிறனும், பாத்திரங்களையும் கழுவிக் குடுத்துடனும்... இன்னிக்கி ஒரு நா மட்டும்தான்...”

மாரியம்மாள் பதில் எதுவும் சொல்லாமல் தயங்கினாள். அவளுடைய மெளனம் உடன்பாடாகத் தோன்றவில்லை என்பதோடு எதிர்மறையாகத் தோன்றவும் செய்தது. அவர்கள் விட்டுவிடவில்லை. வற்புறுத்தினர்கள். வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அவள் சம்மதிக்க வேண்டியதாயிற்று.

“முதல்லே ஆபீஸ் வேலையெல்லாம் முடிச்சுப்போட்டு அப்பாலே வாரேன்.”