பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————

இரண்டாம் தொகுதி/ பிள்ளைப் பூச்சிகள் * 1235

“ஐயையோ அது முடியாது மாரியம்மா! சூப்பிரெண்டு ஐயா ஆபீஸுக்குக் கிளம்பியாகனுமே! முதல்லே அங்கே வந்து வீட்டு வேலையை முடிச்சுக் கொடுத்தால்தான் அவரு கிளம்ப முடியும்” என்றார் சார்ஜெண்ட்.

ஆபீஸ் காம்பவுண்டிலும், அலுவலகத்திற்குள்ளும் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த அந்த வேளையில் இன்னும் ஒதுக்குப்புறமாக விலகி இருந்த சூப்பிரெண்டெண்டின் வீட்டுக்குள் போக அவளுக்குத் தயக்கமாயிருந்தது. சூப்பிரெண்டெண்டின் குடும்பத்தார் எல்லாரும் ஏதோ கல்யாணத்துக்காக வெளியூர் போயிருப்பதாக வேறு சார்ஜெண்டே சொல்லுகிறார்.மாரியம்மாளின் தயக்கத்துக்கு இவை எல்லாம்தான் காரணமாயிருந்தன.

சாதாரணமாக அந்த சூப்பிரரெண்டெண்டின் பார்வையே நன்றாக இராது. அந்த மனிதரின் அலுவலக அறையைச் சுத்தம் செய்யப் போன இரண்டொரு வேளைகளில் கூட அவருடைய பேச்சும், நடத்தையும் பிடிக்காமல் மிரண்டு பதறி அவசர அவசரமாக வெளியேறியிருக்கிறாள் மாரியம்மாள்.

அந்த சூப்பிரண்டெண்டு மாதிரி முரடர்களைப் பொறுத்தவரை - கொட்டாத வர்கள் எல்லாம் பிள்ளைப் பூச்சிகள். கொட்டுகிறவர் கள் அல்லது கொட்ட முடிந்தவர்களென்று தோன்றுகிறவர்களுக்குத்தான் அவர் பயப்படுவார். தன்னையும் அவர் பிள்ளைப் பூச்சியாய் நினைப்பது இருக்கட்டும். தான் தேள் இல்லை. தன்னால் யாரையும் கொட்ட முடியாது என்பது அவளுக்கே புரிந்துதான் இருந்தது.

பிள்ளைப் பூச்சிகள் தேள்களைப்போல நடந்து கொள்ள் முடியாதென்று அவள் உணர்ந்துதான் இருந்தாள்.

அவள் சூப்பிரெண்டெண்டின் அவுட் ஹவுஸிற்குள் நுழைந்ததும் முதலில் வாசற் கதவருகேயே தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

உள்ளே போக அவளுக்குப் பயமாயிருந்தது.

“உள்ளே வாயேன் மாரியம்மா”

“இல்லீங்க முதல்லே இங்கே வாசல்பக்கத்தைச் சுத்தம் பண்ணி முடிச்சிடறேன்.”

“அட, சும்மா உள்ளே வா - சொல்றேன்.

இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது சூப்பிரெண்டெண்டின் முரட்டுக் கை அவளது தோள்பட்டையை அழுத்திக் கொண்டிருந்தது. அந்த மனிதரின் சூடான மூச்சுக்காற்று அவள் உணர்வில் பதிய முடிந்த அளவு நெருக்கமாக உறைத்தது.

அவ்வளவுதான்! உடல் பதறி வியர்க்க அவள் அப்படியே துடைப்பத்தை வீசி விட்டு வெளியே ஒடிவிட்டாள். மாரியம்மாள் பிள்ளைப் பூச்சியானாலும் அவளுக்கு முன்ஜாக்கிரதையுணர்ச்சி அதிகம். அந்த நிலைமைக்கு மேல் அங்கே இருப்பது அபாயம் என்று உள்ளுணர்வு கூறியதால் தான் அவள் வெளியேறி ஒடியிருந்தாள்.

மறுநாள் காலை அவள் ஆபீஸுக்குள் நுழைந்தபோது சார்ஜெண்ட் அவளிடம் தமிழில் டைப் செய்யப்பட்ட ஒரு 'மெமோ’வை நீட்டினான்.