பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1236🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

முந்திய தினம் காலையில் அவள் அலுவலகக் காம்பவுண்டிலிருந்த சூப்பிரெண்டெண்டின் வீட்டில் நுழைந்து பாத்திரங்களைத் திருட முயன்றதாகவும், சூப்பிரெண்டெண்டு அவளைக் கையும் களவுமாகப் பிடிக்க முயன்றபோது அவர்மீது துடைப்பத்தை வீசிவிட்டு ஓடியதாகவும் குற்றம் சாட்டி அவளை ஏன் வேலையிலிருந்து நீக்கக்கூடாது எனக் கேட்டிருந்தது. அவள் அவுட்ஹவுஸில் திருட முயன்றதை வாட்ச்மேனும், அலுவலக சார்ஜெண்டும் பார்த்ததாகவேறு சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டிருந்தன.

பிள்ளைப்பூச்சியாகவே தொடர்ந்து இருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பது மாரியம்மாளுக்கு இப்போது புரிந்தது. பிள்ளைப்பூச்சியாக இருந்தே அழிய வேண்டும் அல்லது தேளாக மாற வேண்டும். தொடர்ந்து பிள்ளைப்பூச்சியாகவே இருந்து பிழைக்க முடியாதென்று தெரிந்தது.

மாரியம்மாள் உஷாரானாள். இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்வதன் முன் தான் பணிபுரிந்த ஒரு தொழிலதிபரின் வீட்டைத் தேடிச் சென்றாள். அந்தத் தொழிலதிபர் ஒரு வக்கீலும் ஆவார். சூப்பிரெண்டெண்டு வீட்டில் நடந்ததைக் கூறி அந்த மெமோவை அவரிடம் காட்டினாள்.

“இதெல்லாம் வெளியே பேசி விவகாரம் பண்ணி ஜெயிக்கிற விஷயமில்லே. நீ பெண்பிள்ளையா இருக்கிறதாலே உன் பேரும் இரசாபாசமாக அடிபடும்.”

“அது சரிதாங்க! ஆனா அதுக்காக அபாண்டமாய்ப் பழி சுமத்தினாங்கன்னா எப்பிடி ஒத்துக்க முடியும்? நாம செய்யாததைச் செஞ்சதாக்குத்தம் சொல்றாங்களே?”

“என்ன கெடுதல் பண்ணினாலும் பதிலுக்கு எதிர்க்கிற சக்தி உங்கிட்ட இல்லேங்கிற துணிவிலேதான் இப்பிடி எல்லாம் பண்றாங்க.”

“நியாயம் ஒண்ணு இருக்குங்களே..?”

“இருக்கா? இருந்துதுன்னு சொல்லு மாரியம்மா முன்னாள் மந்திரி, முன்னாள் தலைவர் மாதிரி நியாயம், தருமம்லாம்கூட முன்னாள் விவகாரம் ஆயிரிச்சே?”

“அந்த இராவணன் எம் பொழைப்பிலே மண்ணைப் போட்டுருவான் போலிருக்கே ஐயா?”

“யாரு அந்த இராவணன்?”

“அதான் சூப்பிரண்டோட பேரு” .

“பேருக்குப்பொருத்தமா ரொம்ப மனுசங்க வாழ மாட்டாங்க. இந்த ஆளு. இராவணன் வேலையே பண்றாரு..?

சொல்லிவிட்டுச் சிரித்தார் அவர்.

“என்னை விட்டுடுங்க ஆபீஸ்ல கிளார்க்கு டைப்பிஸ்ட்னு இருக்கிற வேற பல குடும்பப் பொண்ணுங்களும் இந்த ஆளாலே தவிக்குதுங்க ஐயா.”

வக்கீல் பதில் ஏதுவும் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்தார். பின்பு சிரித்துக் கொண்டே மாரியம்மாளிடம் சொன்னார்.