பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/615

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————

இரண்டாம் தொகுதி/பிள்ளைப் பூச்சிகள் * 1237

“இப்ப ஒரு வேடிக்கை காண்பிக்கிறேன் பாரு... இராவணன் திணறும்படி ஒரு ராமசாமியை வரவழைக்கிறேன்... அது சரி. அந்த ஆபீஸ்லியோ, சூப்பிரண்டெண்ட் குவார்ட்டர்ஸிலேயோ போன் இருக்கா..?”

“குவார்ட்டர்ஸிலேயே இருக்குங்க”

“உனக்கு நம்பர் தெரியுமா?”

“தெரியாதுங்களே..?”

அவரே அவள் எடுத்துக் கொடுத்திருந்த மெமோ கடிதத்திலே இருந்த அலுவலகப் பேரைப் பார்த்து டெலிஃபோன் டைரக்டரியை எடுத்துப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டி நம்பரைக் கண்டுபிடித்தார்.

டெலிஃபோனைச் சுழற்றினார். இது வேறு ஒரு நம்பருக்கு எதிர்ப்புறம் யாரோ எடுத்தார்கள். இவர் கேட்டார் :

“மாநில பொதுச் செயலாளர் ராமசாமி விடுங்களா?”

“.....”

“ராமசாமிதான் பேசறதா? நான் வக்கீல் கண்ணபிரான் பேசறேன். ஒரு அர்ஜெண்ட் மேட்டர். கொஞ்சம் உடனே இங்கே வர முடியுமா?”

“.....”

“சரி, உடனே வந்துடுப்பா. உனக்காக வேறொருத்தரைக் காக்க வச்சிட்டிருக்கேன்.”

பத்து நிமிஷங்களில் போர்டிகோவில் ஒரு கார் சீறிப் பாய்ந்து கொண்டு வந்து நின்றது. கருகருவென்று அடர்ந்த தலைமுடியும், அரும்பு மீசையும் களையான முகமுமுள்ள ஓர் உயரமான இளைஞர் இறங்கி வக்கீலை நோக்கிக் கை கூப்பியபடி வந்தார். மாரியம்மாள் இந்த ஆளைப் பல இடங்களில் பார்த்திருக்கிறாள். தினசரிகளிலும் புகைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆளும் கட்சியின் முக்கியப்புள்ளி. ‘கிங் மேக்கர்’ என்று கூட மக்கள் பேசிக் கொள்வது உண்டு. அவளும் வந்தவரைக் கும்பிட்டாள். கண்ணபிரான் இராமசாமியின் குடும்ப வழக்கறிஞர் என்பது தவிர மிகவும் நெருங்கிய நண்பர் போலிருக்கிறது.

உள்ளுர மாரியம்மாளிடம் நம்பிக்கை ஊற்றுக் கண் திறந்தது.

அவளையும் வைத்துக் கொண்டே கண்ணபிரான் இராமசாமியிடம் விவரிக்கலானார் :

“என்னப்பாது? உங்க ஆட்சியிலே உடல் ஊனமுற்றோர் ஆண்டிலே உடல் ஊனமுற்ற பெண்களை மேலும் ஊனப்படுத்தறாங்க. இதுதான் நீங்க உடல் ஊனமுற்றோர் ஆண்டைக் கொண்டாடற லட்சணமா?”

“என்ன நடந்திச்சுன்னு சொல்லுங்கண்ணே உடனே கவனிக்கிறேன்."