பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1238 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

கண்ணபிரான் மாரியம்மாளுக்குக் கொடுக்கப்பட்ட மெமோவைக் காட்டி இராமசாமிக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார்.

கேட்டுவிட்டு ஆத்திரமடைந்த இராமசாமி, “தாய்க்குலத்துக்கு இப்படிக் கேடு சூழ்ந்த கயமை எதுவாயிருந்தாலும் அது தண்டிக்கப்படும் அம்மா! நீங்க கவலைப்படாதீங்க” என்று சொற்பொழிவுப் பாணியில் மாரியம்மாளிடம் கூற, இராமசாமியை இடைமறித்து,

“இந்தா பாரு ராமசாமி! இது ரொம்ப நாகுக்கான விஷயம். முள் புதரிலே விழுந்த வேஷ்டியை எடுக்கிற மாதிரி. கையிலேயும் முள் குத்தப்படாது, வேஷ்டியும் கிழியக்கூடாது. ஜாக்கிரதையாச் சமாளிக்கனும்” என்றார்.

“என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்கண்ணே!”

“இதான் அந்த சூப்பிரண்டோடஃபோன் நம்பர்...”

இராமசாமி அந்த நம்பரை வாங்கிக் கொண்டு கண்ணபிரானின் முகத்தைப் பார்த்தான். அவர் அவனிடம் சொன்னார்.

“இவளுக்கு அவன் கெடுதல் பண்ணக்கூடாது. அதை அவனுக்குப் புரிய வைப்பதற்காக நாம் அவனுக்குக் கெடுதல் பண்ணித்தான் ஆகணும்கிறது இல்லே! மறுபடி இவங்ககிட்டே வாலாட்டினா - இது பிள்ளைப்பூச்சியா இராது. தேளாகத்தான் மாறவேண்டியிருக்கும். மாறும்னு - புலப்படுத்தினால் போறும்.”

"கவலைப்படாதீங்கண்ணே! உங்க முன்னாடி இப்பவே கச்சிதமா முடிக்கிறேன் பாருங்க.”

இராமசாமி டெலிபோனைச் சுழற்றினான்.

எதிர்ப்புறம் போன் எடுக்கப்பட்டது.

“ஆபீஸ் சூப்பிரரெண்டு இராவணனோட பேசணும். நான் மாநிலப் பொதுச் செயலாளர் - தலைமை நிலையத்திலிருந்து பேசறேன்.”

எதிர்ப்புறம் போனை எடுத்திருந்த சார்ஜெண்ட் அல்லது வாட்ச்மேன் போனை இராவணனிடம் கொடுத்திருக்க வேண்டும்.

"மிஸ்டர் இராவணன்! நான்மாநிலப் பொதுச்செயலாளர் இராமசாமி பேசறேன். உங்கஆபீஸ்ல மாரியம்மாள்னு ஒரு ஸ்வீப்பர் இருக்காங்களா..? அவங்களை அவங்க சேவைக்காக இந்த உடல் ஊனமுற்றோர் ஆண்டில் எங்க கட்சி சார்பிலே கெளரவிக்கனும்னு ஒரு பங்ஷன் அரேன்ஜ் பண்ணிக்கிட்டிருக்கோம்.நோ.நோ.நீங்க இதுக்காக என்னைப் பார்க்க வரணும்ங்கிறது இல்லே. அந்தம்மாவைப் பார்த்து என் சார்பிலே பாராட்டையும் மரியாதையையும் தெரிவியுங்க போதும்.”

மேற்கொண்டு எதுவும் பேசாமல் போனை வைத்தான் இராமசாமி.

“போதுமா அண்ணே.”

“நீ எமகாதகன் அப்பா..”