பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பிள்ளைப் பூச்சிகள்

1239

“நீங்க எப்பவும் போல ஆபீசுக்குப் போங்கம்மா...ஒண்ணும் கண்டுக்காதீங்க.நான் பேசினேன்கிறது ஆபீஸ் பூராப் பரவிடும். ஒரு பய உங்ககிட்டே வாலாட்ட மாட்டான் இனிமே.” “நன்றிங்க.” மாநிலக்கட்சிப் பொதுச் செயலாளர் இராமசாமியையும் வக்கீல் கண்ணபிரானையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள் மாரியம்மாள். அவள் துடைப்பமும் கையுமாகச் சூப்பிரெண்டெண்டின் அறையைப் பெருக்கிச் சுத்தம் செய்ய நுழைந்தபோது, சார்ஜெண்ட் பயபக்தியோடு ஓடிவந்து, “வணக்கம் அக்கா சூப்பிரெண்டு உங்களைப் பார்க்கணும்னாரு” என்றாள். வணக்கமும் புதிது. அக்காப் பட்டமும் புதிது. அவள் எதையும் காண்பித்துக் கொள்ளாமல் சகஜமாகத் தன் பணியில் ஈடுபட்டாள். “வணக்கம் அண்ணி” இது சூப்பிரெண்டெண்ட் இராவணன். அவள் பதில் வணக்கம் சொல்லக்கூட இல்லை. அவராகவே மேலும் பேசிக் கொண்டே போனார்."என்ன இருந்தாலும் நீங்க வயதுல மூத்தவங்க உங்களை அண்ணின்னு கூப்பிடறதுதான் முறை” அவள் பதில் எதுவும் சொல்லாமல் கருமமே கண்ணாகத் தன் வேலையைச் செய்துகொண்டிருந்தாள். அவளைவிடச் சற்று மூத்த வாட்ச்மேன், "இப்பவே லேட்டாயிரிச்சு. நீ பெருக்கி முடிக்கவே ஒம்பதரைஆயிரும்.அப்பாலே தண்ணி ரொப்ப முடியாது.உனக்குப் பதிலா இன்னிக்கி நானே தண்ணி ரொப்பிடலாம்னு பார்க்கிறேன்” - என்று அனுசரணையாகக் குரல் கொடுத்தான். - இதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. குனிந்த தலை நிமிராமல் தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். தன்னளவில் இன்னும் பிள்ளைப்பூச்சியாகத்தான் இருந்தாள்.ஆனால், மற்றவர்களுக்குத் தேளாகத் தோன்றினாள் போலிருக்கிறது.அது போதுமே. - . “டீ குடிக்கிறியா மாரியம்மா." - வாட்ச்மேனின் குரல் பாசத்தோடு ஒலித்தது. “வேண்டாம்.” - தன் வேலையில் குறிப்பாக அவள் தொடர்ந்து தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். - - அந்த ஆபீஸில் காலம் காலமாகத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டிய குப்பை கூளம் அத்தனையும் அன்று ஒரு நாளிலேயே சுத்தமாகிவிட்டாற் போன்ற அவ்வளவு நிம்மதியோடும் திருப்தியோடும் பெருக்கிக் கொண்டிருந்தாள் மாரியம்மாள்.

(கல்கி, தீபாவளி மலர், 1987)