பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஸ்ரீராமனைக் காட்டிலும்

1241

கெளரி! போலீசுக்கு ஃபோன் அது இதுன்னு முயற்சி பண்ணினா, எல்லாம் ரசாபாசமாய்ப் போயிடும். 'என் உயிரினுமினிய சங்கர்! நீயின்றி நானில்லை. நாம் இன்றுபோல் என்றும் இணை பிரியாமல் வாழ்வோம்’னு நீ உன் கைப்பட எழுதின லெட்டர் இன்னும் என்னிடம்தான் இருக்கு” - என்று மிரட்டினான் அவன். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

அவள் மனத்தில் எழுந்த சந்தேகம் உறுதிப்பட்டது. இது ‘பிளாக் மெயில்’தான். ஃபோனில் பணம் கேட்டுப் புலம்பிக் கொண்டிருந்தவன் வீட்டுக்கே வந்து விட்டான் இன்று. கெளரி தன் கோபத்தையும், எரிச்சலையும் உள்ளூற அடக்கிக் கொண்டு சமையற்காரப் பெண்மணியிடம் சொல்லி, அவனுக்கு ஒரு காபி கலந்து கொண்டு போய்க் கொடுத்த பின் இதமாகவும், தன்மையாகவும், சுபாவமான குரலில்,”இத பாரு சங்கர்! நீ அவர் வீட்டிலே இருக்கிறப்போ வா. உன்னை அவருக்கு இண்ட்ரொடியூஸ் பண்ணி விட்டுடறேன். உன் கஷ்டம் தீர உனக்கு ஒரு நல்ல ‘ஜாப்’ கூட அவராலே தேடித் தர முடியும்”- என்று ஆரம்பித்தாள்.

கெளரி தன் கணவனைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்ததும், சங்கரின் முகத்தில் கலவரமும் பதற்றமும் தென்பட்டன.

“என்னை எப்படியாவது வளைச்சுப் பிடிச்சு மாட்டி வைக்கலாம்னு பார்க்கிறியா கெளரீ? அதெல்லாம் நடக்காது. நான் ஒண்ணும் ஏமாளி இல்லே. எனக்கு வேண்டியதை எப்படிக் கறக்கிறதுன்னு தெரியும் எனக்கு” - என்று கடுமையாகவும், கறாராகவும் பதில் வந்தது அவனிடமிருந்து.

இப்போது உண்மை மிகவும் கசப்பானதாக அவளுக்குப் புரிந்தது. சினிமாக்களிலும், நாடகங்களிலும், பத்திரிகைக் கதைகளிலும் படித்திருந்த, பார்த்திருந்த கற்பனைகள் இன்று அவள் வாழ்விலேயே நடக்கின்றன. அவளே பரிதாபத்திற்கும், பரிதவிப்பிற்கும் உரிய கதாநாயகியாகி இருந்தாள் இன்று.

அவள் அவனோடு பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும் போது விளையாட்டாக எழுதிய ஒரு கடிதம் - அதன் வாக்கியங்கள் கூடச் சங்கர் டிக்டேக் செய்தவைதான். அவனுடைய கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். தன் கையெழுத்து அப்படித் திருந்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவள் சக மாணவனான அவனிடம் யோசனை கேட்டதற்கு அவன் கொடுத்த பயிற்சிப் பாடங்களில் ஒன்று இந்த மாதிரிக் கடிதம் எழுதுவது. அந்த அறியாப் பருவத்தில் அவள் அதை நம்பினாள்.

“எதையும் பிரியப்பட்டுச் செய்தால் நன்றாக வரும். நீ எனக்குப் பிரியமாக ஒரு கடிதம் எழுதுவதாக நினைத்துக் கொண்டு எழுது. நல்லா வரும். எழுத்தும் அச்சுக் குண்டா இருக்கும்.”

“நான் உனக்கு அப்பிடி எழுதறது தப்புடா?”

“தப்பு ஒண்னுமில்லேடி! தமிழ் சார் கிளாஸ்ல அடிக்கடி சொல்றதை நீ கேட்டதில்லையா? பிரியப்பட்டு அக்கறை காட்டி மனசு வச்சு எழுதினால் எந்த