பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/620

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1242

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

எழுத்தும் முத்து முத்தா இருக்கும். நான் உனக்கு எழுதறதெல்லாம் முத்து முத்தா இருக்கே, அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சியா?”

கெளரி இப்படி அன்று எழுதிய கடிதம், விளையாட்டுத்தனமாக அவனோடு கை கோத்தபடி எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இரண்டும்தான் இன்று அவளுக்குத் தலைவலிகள் ஆகி இருந்தன. அவளைப் பயமுறுத்த அவனுக்கு ஆயுதங்களாயின.

திடீரெனப் புற்றிலிருந்து பாம்பு படமெடுப்பது போல் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவற்றை வைத்துக் கொண்டு தன்னை சங்கர் ‘'பிளாக் மெயில்’ செய்ய முடியும் என்று, அவள் அன்று - அந்தப் பழைய நாட்களில் கனவு கூடக் கண்டிருக்கவில்லை. சூது வாது தெரியாத பேதைப் பருவம் அது.

இன்று கெளரியின் கணவன் பெங்களூரில் ஒரு கம்பெனி ‘எக்ஸிகியூட்டிவ்’. மிக மிக நல்லவன். கண்ணுக்கு அழகும், பண்பும் ஒரு சேர அமைந்த ஒரு கணவன் என்று கெளரியே அவனைப் பற்றிப் பெருமிதம் கொண்டிருந்தாள். கார், டிரைவர், சமைக்க ஆள் என்று அவளை மகாராணி போல் வைத்துக் கொண்டிருந்தான் அவன். அவர்களுக்குக் கல்யாணமாகி ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை. ராமசந்திர கிருஷ்ணகுமார் என்ற முழுப்பெயர் ராம்.கே. குமார் என்ற சுருங்கியிருந்தது. கெளரியின் பெற்றோர்கள் சென்னை அடையாற்றில் இருந்தனர். குமாரின் பெற்றோர்கள் மயிலாப்பூரில் இருந்தனர்.

இளசுகள் இரண்டும் பெங்களூரில் ஹனிமூன் அனுபவிப்பது போல் ஹாயாக இருக்கட்டும் என்று அவர்களைத் தனியாக விட்டிருந்தனர் பெற்றோர்.

குமார் அவளை மிக மிகச் சுதந்திரமாக நடத்தினான். “கெளரி! கட்டுப் பெட்டித் தனமாகப் பழைய கிராமாந்தரத்து மனைவி போல் ‘அவர் இவர்லாம்’ தேவையில்லை. நீ ஸ்ட்ரெயிட்டா எந்தத் தயக்கமும் இல்லாமல் குமார் என்றே என்னைக் கூப்பிடலாம். நான் உன்னை எப்பிடிக் கெளரி என்று வாய் நிறையக் கூப்பிடறேனோ, அப்படியே நீயும் என்னைக் கூப்பிட உரிமை உண்டு” என்று அவனே அவளை வற்புறுத்திச் சொல்லியிருந்தான்.

“என்னை மாதிரி ஒரு கம்பெனி எக்ஸ்ஸிக்யூடிவ் நேரம் காலம் பார்க்காமல் அலைய வேண்டியிருக்கும். வேற யாருக்காவது ‘ட்ரீட்’ குடுக்க வெளியிலேயே லஞ்ச்சையோ, டின்னரையோ முடிச்சுக்க வேண்டியிருக்கும். அதுனாலே நீ ‘அவர் வந்ததும் சாப்பிட்டுக்கலாம்’னு எந்த வேளையிலும் எனக்காக வீணாக் காத்திருக்கக் கூடாது.அது உன் ஹெல்த்தைப் பாதிக்கும்.இதிலே எல்லாம் நாம பத்தாம் பசலியாயிருக்க வேண்டாம்” என்று செல்லமாக அவளைக் கடிந்து கொள்வான் குமார். அத்தனை தங்கமான குணம்.

இராமன், கிருஷ்ணன் இருவரையும் இணைத்த பெயர் அவனுக்கு இருந்தாலும், அவன் கிருஷ்ணனைப் போல் பல கோபிகைகளின் சகவாசமுள்ளவனோ, இராமனைப் போல் பிறருக்காகச் சொந்த மனைவியையே நெருப்பில் நுழையச்