பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1244 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வேண்டுமாம். போனால் போகிறதென்று கெளரியின் மேல் கருனை கூர்ந்து இரண்டு நாள் தவணை கொடுத்திருந்தான்.

“இப்படி வதைப்பதற்குப் பதில் நேரே வந்து என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை பண்ணிவிட்டுப் போயிடு” - என்று கெளரியே ஃபோனில் அவனிடம் குமுறினாள்.

அவன் அவள் குமுறலைப் பொருட்படுத்தவேயில்லை.

"மறந்துடாதே! நாளன்னிக்கிக் காலையிலே பதினொரு மணியிலேருந்து பன்னிரண்டு மணிக்குள் அதே பழைய லால்பாக் கார்டன்ல கிளாஸ் ஹவுஸ் அருகே எதிர்பார்த்துக் காத்திருப்போன்” - என்று காரியத்தை மீண்டும் வற்புறுத்திவிட்டு ஃபோனை வைத்துவிட்டான்.

இப்படிச் சித்திரவதையை அநுபவிப்பதற்குப் பதில், தானே கணவனிடம் எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லிவிட்டு, 'அவன் விட்ட வழி விடட்டும்' என இருக்கலாமா என்று கூட அவளுக்குத் தோன்றியது.

குமார் அவள் பேருக்கு ஒரு ‘ஸேவிங்ஸ் கணக்கு வைத்துக் கொடுத்து அவ்வப்போது இரண்டாயிரம் மூவாயிரம் என்று வீட்டுச் செலவுக்காக அதில் டெபாஸிட் செய்வான். இது அநேகமாக ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நடக்கிற வழக்கம். அப்போது மாதத் தொடக்கமும் இல்லை. அதில் இருந்ததை எடுத்து, ஏற்கெனவே அவனுக்கு அதுதான் அந்தக் கிராதகன் சங்கருக்கு' அழுதாயிற்று.

'இப்போது இனி மேல் ஸேவிங்க்ஸ் அகெளண்டில் விட வேண்டிய மினிமத்தை விட்டு விட்டு எடுத்தால் கூட இரண்டாயிரம்தான் தேறும். பாக்கி மூவாயிரத்துக்கு எங்கே போவது? கணவனுக்குத் தெரியாமல் மார்வாரி கடையில் நகை எதையாவது அடகு வைக்கலாமா? அவருக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது? ஒரேயடியாக மனம் குழம்பினாள் அவள். மண்டையே வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது. கெடுவுக்கு நடுவே ஒரு நாள் தான் மீதமிருந்தது. நாளை மட்டும்தான். நாளன்றைக்குக் காலையில் பதினொரு மணிக்கு அவனைப் பார்த்துப் பணம் கொடுத்தாக வேண்டும்.

அன்று இரவு மணி பதினொன்றரை. கணவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவள் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். டெலிஃபோன் மணி அடிக்க ஆரம்பித்தது. வெளியே ஹாலில் இருந்த டெலிஃபோனுக்குப்படுக்கை அறையில் ஒரு எக்ஸ்டென்ஷன் இருந்தது. ஒரு பட்டனை அமுக்கினால் உள்ளே இருந்தே டயல் செய்து பேசலாம். வெளியே ஒருவர் - உள்ளே ஒருவராக இருவர் ஒரே சமயத்தில் ஒரு இன்கம்மிங் காலைக் கேட்கவும் வசதி இருந்தது. .

பதற்றத்தோடு கெளரி வெளியே ஒடிப் போய் ஹாலில் ஃபோனை எடுத்தாள். எதிர்ப்புறத்து ஆளை தன்னோடு பேசுகிற ஆளைக் குரல் மூலம் உறுதிப் படுத்திக் கொள்ளாதவரை வாய் திறக்கத் தயங்குவது போல மெளனம் சாதித்தான். -

“யெஸ். கெளரி ஹியர்” என்று அவள் குரல் கொடுத்த பின்பே எதிர்ப் பக்கத்திலிருந்து பதில் வந்தது.