பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/624

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1246 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

சந்தேகமாயிருந்தாலும் அப்புறம் அவன் தன்னிடம் பேசிய தோரணையிலிருந்து அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வழியில்லை என்ற முடிவுக்கு வந்தாள் கெளரி.

கப்பன் பார்க்கில் போய் ஆட்டோவிலிருந்து இறங்குகிற போது உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியிருந்தது. கையில் எப்போதோ பட்டுப் புடவை வாங்கிய இடத்தில் கொடுத்த பாலிதின் பையில் அதிக கனமில்லாமல் இருப்பதற்காக ஐம்பது நூறு ரூபாய்களாக மாற்றித் தயாராயிருந்த ரூபாய் ஐயாயிரம் சில்லறையாக ஒரு பத்து அல்லது இருபது வேண்டுமென்று அவன் கொசுறுக்கு மன்றாடினால் - அதையும் கொடுப்பதற்கு ஐந்து ரூபாய் நோட்டுக்கள் நாலு இவற்றோடு கப்பன் பூங்காசில்ரன்ஸ் கார்னரில் அவள் இறங்கும்போது மணி பத்து ஐம்பத்தைந்து. அதிக ஆள் நடமாட்டமில்லை. ஒரு மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு யாரோ இரண்டு மூன்று முரட்டு ஆட்கள் சிகரெட் புகைத்தவாறே பேசிக் கொண்டிருந்தனர்.

சங்கர் சொல்லியிருந்தபடி குழந்தைகள் பூங்கா முகப்பில் நின்று கொண்டிருந்தான். அவளைக் கண்டவுடன், “என்ன கொண்டு வந்திருக்கே கெளரி? சின்ன அமவுண்டா? பெரிய அமவுண்டா? இதோ, இந்தக் கவர்ல அந்த லெட்டர்ஸ் போட்டோல்லாம் தயாராகப் போட்டு வச்சிருக்கேன். உனக்கு நம்பிக்கையில்லேன்னா நீயே இதைப் பிரிச்சு எல்லாம் சரியாயிருக்கான்னு பார்த்துட்டு அப்புறம் அமவுண்டை எங்கிட்ட குடு! போதும்” என்று தன் கையிலிருந்த தடித்த கவரை அவளிடம் நீட்டினான் அவன்.


“வேண்டாம் சங்கர்! இப்ப எங்கிட்ட அவ்வளவு இல்லே! இந்த அஞ்சுக்கே’ கைவளையலை மார்வாரி கடையிலே வச்சிருக்கேன்” -

இதைக் கேட்டு அவன் ஏளனமாகச் சிரித்தான். "யார் கிட்ட கதை அளக்கிறே! என்னைக் கிறுக்கன்னு நினைச்சியா நீ? மாசம் பத்தாயிரத்துக்கு மேலே சுளை சுளையாச் சம்பாதிக்கிற புருஷன். புத்தம் புது பென்ஸ் கார். மல்லேசுவரத்திலே தோட்டத்தோட பெரிய பங்களா. இவ்வளவையும் வைத்துக் கொண்டு மார்வாரி கடையிலே கைவளையை அடகு வச்சு ஐயாயிரம் வாங்கினேன்னு கப்ஸா அடிச்சா. பைத்தியம் கூட நம்பாது அதை”.

“காரு, வீடு, எல்லாம் கம்பெனி அரேன்ஜ் பண்ணிக் கொடுத்தது. சொந்தமில்லே”

“சரி பிஸினசுக்கு வரேன். அப்போ நீ வெறும் ஐயாயிரம் தான் கொண்டாந்திருக்கே ரைட் பின்னாலே பார்த்துக்கலாம். பொன் முட்டை இடற வாத்தை இப்பவே வயிற்றைக் கிழிக்க வேணாம்.கொண்டாந்திருக்கிறதைக் குடு இஃப் யூடோண்ட்மைண்ட் ஹாவ் ஏ கிளான்ஸ்' என்று அந்தக் கவரை அவளிடம் அவசர அவசரமாக நீட்டினான். அவள் அதை வாங்கினாள். நடுங்கும் கைகளால் ஏதோ ஒர் ஆவலைத் தவிர்க்க முடியாமல் உறையைப் பிரித்தாள். முதல் கடிதத்திலிருந்து, “என் உயிரினு மினிய சங்கர்” என்ற அவளது பள்ளிப் பருவக் கையெழுத்து எட்டிப் பார்த்தது. புகைப்படங்களும் இருந்தன. -

அவற்றை அரைகுறையாகப் பார்த்த பயமும் ஆற்றாமையுமாக அவள் மறுபடி உறையிலிட்டுத் திருப்பிக் கொடுக்க இருந்தபோது மிக அருகே காலடி ஓசை கேட்டது.