பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

694 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

பேசிக்கொண்டுதான் இருக்கிறான். இன்னொன்றுகூடக் கேள்விப்பட்டேன். அவன் உன்னிடம் கொடுத்தானே அந்தக்கண்ணாடிச் சட்டத்துக்குள் எழுதி வைத்திருக்கிற கவிதையில் அவனுடைய கையெழுத்தே இல்லையாமே? எழுத்து அச்சுக் குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக யாரோ சிநேகிதனை விட்டு வெறும் கவிதையை மட்டும் காப்பி பண்ணச் சொல்லி அதை அப்படியே சட்டம் போட்டு உன்னிடம் கொடுத்துவிட்டானாம். அதனால் பிரின்ஸிபால் தன்னைக் கூப்பிட்டு விசாரிக்கும் போது. இதை நான் எழுதவுமில்லை. கொடுக்கவும் இல்லை என்று ஒரேயடியாகப் புளுகிவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாமென்றுதான் அவன் சிறிதும் கவலைப்படாமல் சிரித்துப்பேசிக் கொண்டிருக்கிறான் என்றும் ஒரு வதந்தி நிலவுகிறது. அவன் அப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையடியம்மா! எமகாதகனாச்சே?” என்று தோழி சொல்லிக் கொண்டே வந்தபோது அவள் கடைசியாகக் கூறிய வதந்தியைக் கேட்டுச் செங்கமலத்துக்கே ஆறதலாக இருந்தது. பெண்ணையும் சபலத்தையும் ஒரே மூலப் பொருளிலிருந்துதான் செய்திருக்கிறார்கள்’ என்ற வாக்கியத்துக்கு அப்போது பிரத்தியட்ச உதாரணமாக இருந்தாள் செங்கமலம். ஏதோ ஒர் ஆத்திரத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத வெறியோடு அந்தப் படத்தையும் அதில் அடங்கியிருந்த கவிதையையும் அதைப் படித்துப் பார்க்காமலே பிரின்ஸிபாலிடம் கொண்டுபோய்க் கொடுத்துப் புகார் செய்துவிட்டு வந்திருந்தாலும், இப்போது அவள் மனம் கிடந்து தவித்தது. தாறுமாறாக ஏதேனும் நடந்து தண்டபாணி அந்தக் கல்லூரியை விட்டு வெளியேறும்படி ஆகிவிடக் கூடாதே என்று புழுவாகத் துடித்தது அவள் அந்தரங்கம்! செங்கமலம் தன்னைத் தேடி வந்த தோழியைக் கேட்டாள். "நிஜ மாகவா அப்படிப்பேசிக் கொள்கிறார்கள்? அதில் அவர் கையெழுத்தே கிடையாதா?”

“ஏன்? உனக்குத் தெரியாதா? நீ அதைப் படித்தே பார்க்கவில்லையா, செங்கமலம்?”

“இல்லை! அப்படியே கொண்டுபோய்க் கொடுத்துவிட்டேன்.”

“எப்படிக் கொடுத்திருந்தால் என்னடீ? அவன் அதிருஷ்டக்காரன்! அவனை இந்தப் பழியிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்பதற்காக இந்தக் கல்லூரியிலேயே இன்னும் யாராவது ஒரு மாணவன்,'தண்டபாணிக்கு ஒரு பாவமும் தெரியாது. அந்தக் கவிதையை எழுதியவன் நான்தான் ஸார்’ என்று குற்றத்தைத் தன் தலையில் ஏற்றுக்கொண்டு தியாகம் செய்தால்கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. மாணவர்கள் மத்தியிலே அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது அவனுக்கு அவன் ‘டிஸ்மிஸ்’ ஆனாலோ நாளைக்குக் காலையிலேயே அத்தனை மாணவர்களும் வேலை நிறுத்தம் அது இது என்று கலகம் பண்ணக்கூட ஆரம்பித்து விடுவார்கள். இப்போதே கல்லூரியில் அத்தனை மாணவர்களும் உன் தலையை உருட்டுகிறார்கள். ‘எல்லாம் அந்தக் கிளியோபாட்ராவின் வேலை’ என்று என் காதில் கேட்கும்படியாகவே ஒருத்தன் உன்னைப் பற்றிச் சொல்லிக் கறுவிக் கொண்டு போனான்.”

செங்கமலம் யோசித்தாள். கருமேகக் காட்டினிலே நீ ஓர் கனக மின்னலடி என்று அந்த முரடனின் இனிய குரல் இன்னும் அவள் செவிகளில் ஒலிப்பது போலிருந்தது.