பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

630 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வெட்டரிவாளை மட்டும் நான் உபயோகிச்சுக்கலாமாங்க” என்று கூறிவிட்டுப் பாறையில் அரிவாளைத் தீட்டத் தொடங்கி விட்டான் சின்னமுத்துப் பண்டாரம்! நானும் தேவரும் எவ்வளவோ தடுத்தும் பயன்படவில்லை. சின்னமுத்துவும் இன்ஸ்பெக்டரும் கடைசி வரை தங்கள் பந்தயத்திலும் தீர்மானத்திலும் உடும்புப் பிடியாக நின்றார்கள்.

இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு எல்லோரும் வாகை மரத்தடியில் சந்திப்பது என்று தீர்மானித்துக் கொண்டோம்.

அன்று அமாவாசைக்கு முதல் நாளாகையினால் இருட்டு மைக் குழம்பாக இருந்தது. நாங்கள் நான்கு பேரும் வாகை மரத்துப் பரண் மேல் உட்கார்ந்திருந்தோம். கீழே வனவிலங்குகளின் அட்டகாசம் பயங்கரமான ஒலிகளின் மூலம் எங்கள் செவியை எட்டிக்கொண்டிருந்தது.

வாகை மரத்திற்கு நேர் எதிரே அத்தியூற்று நீர் ஓடையின் சரிவிலிருந்த ஒரு பெரிய பலாமரத்தின்மேல் பேட்டரி லைட்டை அடித்துப் பரணிலிருந்தே பார்த்தார் தேவர். கீழே எழுபதடி பள்ளத்தில் இருபதடி தூரத்தில் அமைந்திருந்தது அந்தப் பெரிய பலாமரம்.

பேட்டரி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் நாங்கள் நுணுக்கமாக நோக்கினோம். அந்த மரத்தின் தூரிலிருந்த நாலைந்து பலாப்பழங்களைச் சுற்றிலும் பூதாகாரமான கரும் பூதங்களைப்போல் ஐந்தாறு கரடிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. காட்டு மிருகங்களை அடிக்கடி கண்டு குளிர்விட்டுப்போன எங்களையே புல்லரிக்குமாறு செய்தது அந்தக் காட்சி.

என் கைக்கடிகாரத்தில் ரேடியோ எண்களும் முட்களும் அமைந்திருந்ததனால் நான் மணி பதினொன்று என்று இன்ஸ்பெக்டரிடம் கூறினேன்.

"நேரே அந்தப் பலாமரத்தின் தூருக்குப்போய், கரடிகள் மொய்த்திருக்கும் பலாப்பழங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு, அவைகளை வென்றுவிட்டு இங்கே வரவேண்டியது. முக்கால் மணி நேரத்துக்குள் மரத்தடிக்குத் திருப்பிப் பரணுக்கு வந்துவிடவேண்டும். இவைகள் என் நிபந்தனைகள்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“உங்க நிபந்தனைப்படியே நான் போய் வர்ரேனா இல்லையாங்கிறதை, பேட்டரி லைட்டு அடிச்சு நல்லாப் பார்த்துக்குங்க” கூறிக்கொண்டே நீண்ட வெட்டரிவாளை இடுப்பிலே சொருகிக்கொண்டு வாகை மரத்துப் பரணிலிருந்து கீழே இறங்கினான் சின்னமுத்துப்பண்டாரம். “பண்டாரம்! பந்தயம், வீராப்பு, இதையெல்லாம்விட உயிர் பெரிசு, அப்பா! ஜாக்கிரதை” தேவர் எச்சரித்தார்.

"நீங்க பேசாமே நடக்கிற வேடிக்கையைப் பார்த்துக்கிட்டிருங்க. எனக்கா அதெல்லாம் தெரியாது. உங்க இனிசுபெட்டர் ஐயாவை ஐம்பது ரூபாயை இப்பவே எண்ணிவச்சுக்கிடச்சொல்லுங்க” இப்படிக் கூறியபடி வாகை மரத்தின் கீழே இறங்கிப்