பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93. பெயர்ப் பொருத்தம்

ன்னுடைய இலட்சியத்தைப் பரப்புவதற்கென்று தானே ஒரு புதுப் பத்திரிகை வெளியிடுவதென்கிற முடிவுக்கு வந்து விட்டான் கைலாசம். என்ன பேர் வைப்பதென்பதுதான் முடிவாகவில்லை. வாசகர்களுடைய கவனத்தைக் கவர்கிற பேராக இருக்க வேண்டுமென்பது அவன் விருப்பம். ஆனால் அப்படிப்பட்ட பேர் ஒன்று கூட மீதமில்லாதபடி எல்லோரும் வைத்து முடித்திருந்தார்கள். தன்னுடைய நண்பர்கள் திருவேங்கடம், நாராயணசாமி, பராங்குசம் எல்லோரையும் சாயங்காலம் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தான் கைலாசம். ‘திருவேங்கடம் இலக்கிய ஆர்வமுள்ளவன். நாராயணசாமி அரசியல்வாதி. பராங்குசம் சரியான அரட்டைக்கல்லி. இம்மூன்று பேரையும் கலந்து ஆலோசித்தால் இலக்கியம், அரசியல், நகைச்சுவை, மூன்று தரத்துப் பேர்களும் நிறையக் கிடைக்கும். அதில் ஏதாவது ஒன்றைப் புதுப் பத்திரிகைக்குச் சூட்டி விடலாம்’ என்பதுதான் அவன் நண்பர்களை அழைத்திருந்ததற்குக் காரணம்.

நண்பர்களுக்காகக் கொஞ்சம் டிபனும், காப்பியும் செலவாகும்! அதைப் பார்த்தால் முடியுமா? பத்திரிகைக்குப் பேர் கிடைக்க வேண்டுமே!

சரியாக நாலு மணிக்கு நண்பர்கள் வந்து விட்டார்கள். சிற்றுண்டி, காப்பி முடிந்தது. வெற்றிலை பாக்கு வேள்வியும் முடிந்தது.

“ஏண்டா கைலாசம்! ‘தாம்பூலம்’ என்றே உன் பத்திரிகைக்குப் பேர் வைத்து விடேன். மங்களகரமான பெயர், புதுமையாகவும் இருக்கும்” என்றான் அரட்டை பராங்குசம்.

“வைக்கீலாம். ஆனால் அதிலே ஒரு வம்பு இருக்கிறது. அப்பனே! ‘சர்க்குலேஷன்’ பாயிண்டிலே உதைக்கும். பத்திரிகைகளின் விற்பனை எல்லாம் பெரும்பாலும் வெற்றிலை பாக்குக் கடைகளில்தான். அங்கே போய் ஒரு வாசகன் ‘தாம்பூலம்’ கொடு என்று கேட்டால், கடைக்காரன் நிஜமாகவே தாம்பூலம் கொடுத்துவிடுவானே? நம் பத்திரிகை உருப்படாற்போல்தான்!” என்று அந்தப் பேரைக் கைலாசம் மறுத்துவிட்டான். - -

நாராயணசாமி ஆரம்பித்தார் : “அரசியல் ஆவேசம்தான் இன்று பத்திரிகை விற்பனைக்கு முக்கியமான தூண்டுதல் நான் ஆவேசமும் உத்வேகமும் நிறைந்த ஒரு பேர் சொல்லுகிறேன். ‘அக்கினி’ என்று வைத்து விடு” .

“அங்ஙனம் புகலற்க! யாம் அப்பெயரை வன்மையாக மறுக்கின்றோம். ‘நெருப்பு’ என்னும் பைந்தமிழ்ச் சொல் இருக்கும் போது அதைப் புறக்கணித்துவிட்டு ‘அக்கினி’