பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

708 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



பார்த்திருக்கிறார். அப்படி அசடுகளில் ஒருத்தியாக இந்தப் பதினேழாம் நம்பர்ப் பெண்ணை அவரால் நினைக்க முடியாது. பதினேழாம் நம்பர் வீடு என்கிற எட்டு ஒண்டுக் குடித்தனங்களடங்கிய நீண்ட இருள் மாளிகையில் ஏதோ ஒரு சின்ன அறையில் அந்தப் பெண்ணும் அவளுடைய இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். தினந்தோறும் காலையில் அதே பத்துமணிக்குத் தபால்கார நாயுடு முதல் டெலிவரிக்கான கடிதங்களோடு கனகம்மாள் தெருமுனையில் திரும்பி உள்ளே நுழைவதற்கும் அந்தப் பெண் குழந்தைகள் பின் தொடர வாசலுக்கு வந்து ஏக்கத்தோடு நிற்பதற்கும் சரியாக இருக்கும்.

“கெளரீன்னு ஏதாவது இருக்கான்னு பாருங்க நாயுடு?” என்று அந்தப் பெண் பொறுமையையும்,நம்பிக்கையையும் விட்டுவிடாமல் நான் தவறாமல் நிதானமாகக் கேட்கிறபோது, ‘இவளுக்கு இல்லை என்று சொல்லியாக வேண்டியிருக்கிறதே’ என்ற ஏக்கத்தோடுதான் நாயுடுவும் பதில் சொல்லியிருக்கிறார். சில வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகி ஆறவிட்ட கூந்தல் முதுகிலே காடாய்ப் புரள நெற்றியில் குங்குமமும் கண்களில் தாபமுமாக சாட்சாத் மகாலட்சுமியே நேரில் வந்து நின்றுவிட்டது போல், ‘எனக்கு ஏதாவது கடிதாசு இருக்கா பாருங்க?’ன்னு அந்தப் பெண் கேட்கிறபோது ‘ஒண்ணும் இல்லீங்களே அம்மா’ என்று சொல்லிக் கையை விரிப்பதற்குள் அவர் மனம் இரகசியமாக உள்ளேயே அழுது ஒய்ந்திருக்கிறது.அந்தப் பெண் கெளரியின் கணவன் குருமூர்த்தி பக்கத்து பஜாரில் உள்ள கிருஷ்ண பவான் ஹோட்டலில் சர்வராக இருந்து படிப்படியாக முதலாளியின் அபிமானத்தைக் கவர்ந்து முடிவில் காஷியராக உயர்வு பெற்றுக் கல்லாவில் உட்கார்ந்திருந்தான்.இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் ஒருநாள் கிருஷ்ண பவான் கல்லாவில் நிறையப் பணம் திருட்டுப் போய்விட்டதாம். பில் போடுகிறவர்களின் ஒத்துழையாமையினாலோ பொறாமையினாலோ காஷில் பணம் குறைந்திருக்கலாம். அல்லது குருமூர்ததியைத் தவிர கல்லாவில் உட்கார்ந்து பணம் வாங்கிப் போடுகிற மற்றொரு நபரான முதலாளியின் சிறிய மகன் சுந்தரம் ஏதாவது மைனர் விளையாட்டுக்காகப் பணத்தைச் சொல்லாமலே கையாடியிருக்கலாம். பழி என்னவோ குருமூர்த்தியின் தலையில்தான் வந்து விழுந்தது. முதலாளி அவனைக் கன்னா பின்னாவென்று பேசி வேலையிலிருந்தும் துரத்திவிட்டார்.செய்யாத குற்றத்தை மறுக்கவும் திராணியின்றித் தலை குனிந்தபடியே விலகி வெளியில் வரும் சமூகக்கோழைகளில் குருமூர்த்தியும் ஒருவன். செய்த குற்றத்தை மறைத்துத் தப்பித்துக் கொள்வது எப்படிச் சமூகத் துரோகமோ அப்படியே செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்வதும் ஒரு வகையில் சமூகத் துரோகம்தான். ஏனென்றால் தான் செய்யாத குற்றத்தைத் தன் தலையில் போட்டுக் கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடியே வெளிவருகிற கோழை அந்தக் குற்றத்தை உண்மையில் செய்தவனைக் காப்பாற்றிக் கொடுக்கிற சமூகத் துரோகத்தையும் செய்ய உடந்தையாகிறான்.குருமூர்த்தி என்றுமே அப்பாவி. வேலை போன மறுநாள் எங்கோ பக்கத்து நகரத்துக்குப் போய் வருவதாகச் சொல்லிவிட்டுக் கெளரியிடம் ஐந்து ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு போனவன் நாளது தேதி வரை என்ன ஆனான், எங்கே போனான் என்ற தகவலே தெரியாமல்