பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி அத்தியூற்று 631 பள்ளத்தைக் கடந்து பலா மரத்தை நோக்கி உருவிய அரிவாளுடனே நடந்தான் சின்னமுத்துப் பண்டாரம். எனக்கு நெஞ்சு பதறியது; உடல் நடுங்கியது. தேவர் மீண்டும் பாட்டரி லைட்டின் விசையை அழுத்தினார். அதன் ஒளியில் எங்களுக்கு அரிவாள் ஏந்திய கையுடன் அடிமேல் அடி வைத்துப் பலாமரத்தை நெருங்கும் சின்னமுத்துவின் சிறிய உருவம் தெரிந்தது. பண்டாரம் போகிற போக்கில் வெறொரு பலாமரத்திலிருந்த முதிர்ந்து கனிந்த பழமொன்றை இரு கூறாக வகிர்ந்து எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட பலாமரத்திற்குச் சென்றான். அவன் எதற்காக ஒரு கையில் அரிவாளையும் மற்றொரு கையில் பலாப்பழத்தையும் எடுத்துக்கொண்டான் என்பது எங்களுக்கு விளங்கவே இல்லை. பண்டாரம் அடுத்த விநாடி மயிர் சிவிர்க்கும்படியான கூச்சல் ஒன்றைப் போட்டுக் கொண்டே ஓங்கிய அரிவாளுடன் பலாமரத்தை நெருங்கிவிட்டான். என்ன பயங்கரம்! ஏககாலத்தில் அங்கே கூடியிருந்த அத்தனைக் கரடிகளும் அவனை நோக்கிப் பாய்ந்து வளைத்துக்கொண்டன. - தேவர், சின்னமுத்து உயிர் பிழைப்பது துர்லபம் என்று எண்ணிக்கொண்டு, நான் மறைவாகப் பரண்மீது ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிக் கரடிகளைச் சுடத் தயாராகிவிட்டார். எனக்கும் இன்ஸ்பெக்டருக்கும் ரத்தம் உறைந்துவிட்டது. பேட்டரி லைட்டின் மங்கலான ஒளியில் பலாமரத்தடியில் சின்னமுத்துவின் உருவமே தெரியவில்லை. ஒரே கரடிக் கும்பலாகத் தெரிந்தது. அதற்கிடையில் லேசாக ஒரு மனித உருவம் தெரிவதுபோல் இருந்தது. காது செவிடாகும்படியான கரடிகளின் பயங்கர ஒலம். இந்த நிலைமையில், நாங்கள் மூவருமே திகைத்து மலைக்கும்படியான ஒரு செயலைச் சின்னமுத்து செய்தான். - கையிலிருந்த பலாப்பழத்தோடும் அரிவாளோடும் ஒரே தாவாகத் தாவி மரத்தின் அடிக் கிளையின் மேல் நின்று கொண்டு பழத்தை இரு கூறாகப் பிளந்து கீழ் நோக்கி நீட்டினான். அவன் எதிர்பார்த்தபடியே ஒரே சமயத்தில் நாலைந்து கரடிகள் அந்தப் பழக் கீறலை நோக்கித் தலையை உயர்த்தி வாயைப் பிளந்தன. சட்டென்று உடனே பழக் கீறலை இடது கைக்கு மாற்றிக்கொண்டு வலது கையால் அரிவாளை ஓங்கினான் சின்னமுத்து. இருளில் வேகமாக அவன் அரிவாள் மின்னிப் பாய்வதையும் கரடிகள் ஒலமிட்டுக் கொண்டு கீழே விழுவதையும் நாங்கள் கண்டோம். பந்தய நிபந்தனைப்படி முக்கால் மணிநேரத்தில் அதே மரத்திலிருந்து முழுப்பழம் ஒன்றை அறுத்துக் கொண்டு வெற்றி வீரனாக இறுமாப்பு நடை போட்டு வந்து சேர்ந்துவிட்டான் சின்னமுத்துப் பண்டாரம். இன்ஸ்பெக்டர் வாயடைத்துப் போய் நின்றார். நானும் தேவரும் அவன் சாமர்த்தியத்தைப் பாராட்டினோம். மணி பர்ஸைத் திறந்து ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களை அவனிடம் நீட்டினார் இன்ஸ்பெக்டர்.