பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

712 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



கடைசியாக இந்தப் பதினேழாம் நம்பருக்கு ஒரு பதில் வந்துவிட்டது. என்ன ஆனந்தம்!’

வெறும் கார்டுதான்! கார்டானாலும் அது ஒரு பதில்தானே? கார்டோ கவரோ கடிதம் என்பது செய்தியைத் தாங்கி வரும் ஒரு வாகனம். மதிப்பு என்னவோ எல்லாத்துக்கும் ஒண்ணுதான். ‘இப்போதே ‘பீட்’டின் மற்ற வீதிகளை யெல்லாம் விட்டு விட்டு நேரே போய் இதைப் பதினேழாம் நம்பர் வீட்டுப் பெண்ணின் கையில் கொடுத்து விட்டு உடனே ரிடையராகிவிட்டால் என்ன?’ என்று ஆனந்தமும் பரவசமும் மேலிடத் தனக்குள் நினைத்தார் நாயுடு.ஆனால் அப்படிச் செய்ய முடியுமா? முறை என்று ஒன்று இருக்கிறதே? ஒன்பதாம் நம்பர் பீட் நாயுடுவின் ஆறு தெருக்களில் நான்காவது சுற்றில்தான் கனகம்மாள் தெருவே வரும். அன்று அவருக்கிருந்த குதூகலத்தில் மற்ற மூன்று தெருக்களையும் முக்கால் மணி நேரத்தில் சுற்றிக் கடிதங்களைப் பட்டுவாடா செய்துவிட்டு விரைவாகக் கனகம்மாள் தெருவுக்குப் பறந்தார். கனகம்மாள் தெருவுக்குள் நுழைந்தாலும், பதினேழாம் நம்பருக்கு முன்னால் பதினாறு வீடுகள் இருக்கின்றனவே? அதில் சராசரி பத்து வீட்டுக்காவது நாள் தவறாமல் கடிதங்கள் இருக்கும். பொறுமையாக அவற்றையும் பட்டுவாடா செய்து முடித்து விட்டு மேலாக இருந்த ‘கெளரி அம்மாள் - பதினேழு கனகம்மாள் தெரு’ என்ற கார்டின் முதுகுப்புறத்தைப் புரட்டி என்னதான் பதில் வந்திருக்கிறது? இந்தக் குருமூர்த்தி எங்கேதான் போய்த் தொலைந்திருக்கிறான்? தெரிந்து கொள்ளலாமே! என்ற ஆவலோடு முன் பக்கமாகத் திருப்பி அந்தக் கார்டைப் படித்தவர் அப்படியே பேயறை பட்டவர் போல் திகைத்து நின்றார். கண்களிலிருந்து நீர் வடிய ஆரம்பித்தது. உடம்பு கிடுகிடுவென்று நடுங்கியது. அதுவரை அவர்கள் குருமூர்த்திக்குக் கடிதமே எழுதித் தேடாது விட்டிருந்த ஒரு புதுச்சாமியாரின் மடத்திலிருந்து அக்கடிதம் வந்திருந்தது.

“ஸ்ரீமதி கெளரி அம்மாளுக்குக் கடுவன் மலை சித்தானந்த சாமிகள் மடத்துக் காரியஸ்தர் எழுதுவது : இதில் எழுதப் போகிற செய்தியைத் தாங்கிக் கொள்கிற மனப்பக்குவத்தையும் கடவுள்தான் உங்களுக்குக்கொடுக்கவேண்டும்.உங்கள் கணவர் ஸ்ரீகுருமூர்த்தி அவர்கள் நம் சாமிகளைப் பார்க்க சில மாதங்களுக்கு முன் இங்கு வந்தார். வாழ்வில் தமக்கு மிகவும் போதாத காலமாகிவிட்டதென்றும் காரியசித்தி ஆக ஏதாவது பரிகாரத்தைக் கூற வேண்டும் என்றும் சாமிகளைக் கேட்டார். சாமிகள் சில மாதங்கள் இங்கே தங்கி மெளனவிரதம் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து மலையுச்சியில் உள்ள கோவிலை ஒன்பது தரம் சுற்றிப் பிரார்த்திக்க வேண்டும். நாளடைவில் தனியாக ஒரு ஒட்டலே நடத்துகிற உயர்நிலை கைகூடும்” என்று உங்கள் கணவருக்குக் கூறியருளினார். சாமிகள் கூறியபடியே செய்து வருகையில் இரண்டு மூன்று தினங்களுக்கு முன் அதிகாலை இருளில் மலையைச் சுற்றும்போது மழை பெய்து வழுக்கலாயிருந்த பாறையில் சறுக்கி மலையிலிருந்து ஸ்ரீ குருமூர்த்தி அவர்கள் மூவாயிரம் அடி பள்ளத்தில் விழுந்து துர்மரணம் அடைந்துவிட்டார்கள் என்பதை மிக்க வருத்தத்துடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.”