பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / ஒரு மான் + ஒரு வலை ★ 717



மனோரஞ்சிதத்தின் நடை, உடை, புன்னகை, பேச்சு, குரல், சரீர வாளிப்பு எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து நமது கதாநாயகனான திருஆர்.எஸ்.ராஜா நாளுக்கு நாள் உருகிக் கொண்டிருந்தான். கடைசியில் அந்த உருக்கத்துக்கும் தவிப்புக்கும் இப்போது வழி பிறந்துவிட்டது.

அவன் புத்தகங்களில் சொருகிச் சொருகி அனுப்பிய காதல் கடிதங்களுக்கும், நேரில் குழைந்து குழைந்து பேச முயன்ற காதல் மொழிகளுக்கும் செவி சாய்க்காமல் மில்லியன் டாலர் பெறுகிற ஒரு மயக்குப் புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு அலட்சியமாகப் போய்க் கொண்டிருந்த மனோரஞ்சிதப் புள்ளிமான் கடைசியில் அவனைச் சந்திப்பதற்கு ஆறுமுகம் பூங்காவைத் தேடி வருவதாக இப்போது இப்படி ஒப்புக் கொண்டுவிட்டது. அவன் இந்த மனோரஞ்சித மானுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் அவள் புகைப்படம் ஒன்றைக் கேட்டு வைத்திருந்தான்; ஒருவேளை அவள் புகைப்படத்தோடு வந்தாலும் வரலாம் என்ற எண்ணம் ஞாபகம் வரவே அவளிடம் கொடுப்பதற்குத் தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் உடனே தயார் செய்து ஞாபகமாக எடுத்து வைத்துக்கொண்டான் திருஆர்.எஸ்.ராஜா. அன்று அவனுடைய நினைவில் ஆறுமுகம் பூங்காவையும் சாயங்காலம் ஆறுமணியையும் அங்கு தன்னைச் சந்திக்க வரப்போகும் மனோரஞ்சித மானைப் பற்றியுமே எண்ணங்கள் மோதிச் சுழன்று கொண்டிருந்தன.

‘ஏ. ஆர்.எஸ்.ராஜா! உனக்கு மற்றவர்களை வளைக்க வேறு வலை எதற்கடா? நீயே மற்றவர்களை வீசிப் பிடிக்கும் ஒரு பெரிய வசீகர வலையாயிற்றே?

இது நிற்க. ஆறுமுகம் பூங்காவைப் பற்றி இங்கு சில வார்த்கைள் அவசியம் சொல்லியாக வேண்டும். அந்த மெடிகல் காலேஜ் கட்டிடங்களின் வலது பக்கத்தில் பெண்கள் ஹாஸ்டலுக்கும் மாணவர்கள் ஹாஸ்டலுக்கும் பின்புறமாக உள்ள சந்து வழியைக் கடந்து பத்தடி நடந்தால் எதிரே தென்படும் இந்தப் பெரிய பூங்காவின் முக்கியத்துவம் அந்தக் கல்லூரியின் ஒவ்வொரு மாணவனுக்கும் தெரியும். அந்தக் காலேஜின் ‘லவ் மியூஸியம்’ அல்லது ‘லவ்வர்ஸ் வாக்’ இதுதான். அந்த நகரில் எந்தக் காலத்திலோ முனிசிபல் சேர்மனாக இருந்து மறைந்துவிட்ட யாரோ ஒர் ஆறுமுகத்தின் பெயரையே இந்தப் பூங்காவுக்கு வைத்திருந்தார்கள். வகுப்புகளுக்கு மட்டம் போடுகிற மாணவர்கள் போய் உட்கார்ந்து மற்ற மாணவ மாணவிகளிடம் அரட்டை அடிக்கிற இடமும் இந்த ஆறுமுகம் பூங்காதான். சில நாட்களில் வகுப்புகளிலே அட்டெண்டன்ஸ் நிறையும்படி பிரஸ்ண்ட் போட வேண்டுமானால் ரிஜிஸ்தரை இந்தப் பூங்காவுக்கே எடுத்துவந்துவிட வேண்டும் போல நிலைமை அவ்வளவு மோசமாகிவிடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆறுமுகம் பூங்கா அந்த மெடிகல் காலேஜின் பிருந்தாவனமாக இருந்தது.மாணவர்களாகிய கோபாலர்கள் கோபிகைகளை நாடும் கலியுக பிருந்தாவனமாக ஆறுமுகம் பூங்கா விளங்கிவந்தது என்று வேண்டுமானால் இன்னும் தெளிவாக வைத்துக் கொள்ளுங்களேன்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. மேற்படி சுபயோக சுபதினத்தில் சரியாகச் சாயங்காலம் ஆறு மணிக்குப் படிய வாரிவிட்ட தலையும் நன்றாக டிரஸ்செய்து