பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

720 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



வைத்துக் கொடுத்தாலோ, இந்தப் போட்டோவில் ‘உடன் பிறவாச் சகோதரிக்கு’ என்று நீரே எழுதிக் கையெழுத்திட்டிருப்பதைக் காண்பித்து உம்முடைய மானத்தை வாங்கிவிடுவேன். அப்புறம் மரியாதை தவறிவிடும். என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர் நீர்? கண்ட கண்ட இடத்தில் எதிரே வந்து நின்று பல்லை இளிப்பதும், குழைவதும் கொஞ்சம்கூட நன்றாயில்லை. நாங்களெல்லாம் படிப்பதற்காக ஆயிரம் சிபாரிசு பிடித்து அலைந்து மெடிகல் காலேஜ் அட்மிஷனுக்கு வழி செய்து கொண்டு மிக மிகச் சிரமப்பட்டு இங்கே வந்திருக்கிறோம். உம்மைப் போன்ற சோம்பேறிகளைக் காதலிப்பதைவிட எத்தனையோ முக்கியமான காரியங்களெல்லாம் எங்களுக்கு இருக்கின்றன.”

திருஆர்எஸ். ராஜாவுக்கு ஒரே அதிர்ச்சி. அவன் வழக்கம்போல் மானுக்கு வலை விரித்தான். வழக்கமில்லாத அபூர்வமாக அதில் ஒரு புலிக்குட்டி வந்து விழுவதுபோல் விழுந்து அவனையும் அவன் வலையையும் சேர்த்தே கடித்துக் குதறி எறிந்துவிட்டது.

“ரெண்டு மூணு தமிழ் சினிமாப் படத்திலே வர்ர காதல் சீனைப் பார்த்துவிட்டு அஞ்சாறு தமிழ்ப் பத்திரிகையிலே வர்ர 'பாய் மீட்ஸ் கேர்ள்’ கதைகளைப் படிச்சிப்பிட்டு இனிமேலாவது இப்படி அசடாகத் திரியாதீர் மிஸ்டர் ஆர்.எஸ்.ரா!" என்று கடைசியாக அவள் இரைந்து சாடி விட்டுப் புலியாக எழுந்து விரைந்தபோது நமது கதாநாயகனான ஆர்.எஸ்.ராஜா ஆறுமுகம் பூங்காவின் புல் தரையில் நிராதரவாகக் கிடந்தான்.

‘அவன் விரிப்பதற்குத் தனி வலை தேவையில்லை. அவனே ஒரு பெரிய வலை’ என்ற அவனது ஆதிகாலத்து ஒரிஜினல் புகழ் அன்றுடன் காலாவதி ஆனதுபோல் பாவித்துக்கொண்டு காதல் போர்க்களத்தில் தோற்ற தோல்வியைக் கொண்டாடு முகத்தான் அன்றிரவே ஒரு முழுப் பெர்ரி மாஸானையும் - இருபது ‘பாய் மீட்ஸ் கேர்ள்’ கதைகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டு அப்புறம் நம் திரு. ஆர். எஸ்.ராஜா தூங்க முயன்ற சமயத்தில் இநத் உலகத்தில் பொழுது விடிந்திருந்தது! பாவம்! அதனால் என்ன? விடிந்தால் தூங்கக்கூடாதென்று யார் சொன்னது? இரவில் தூங்காமல் இருப்பதற்கு நம் ஆர்.எஸ்.ராஜாவுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவுக்குப் பகலில் தூங்குவதற்கும் உரிமை உண்டு. “காலேஜ் என்ன ஆகிறது? படிப்பு என்ன ஆகிறது?” என்று நீங்கள் கேட்கிறீர்களா? அதற்காகவா நம் ராஜா இங்கு வந்திருக்கிறான்? பெர்ரி மாஸன், குவாலிடி ஐஸ்கிரீம், கோல்ட்பிளேக் சிகரெட், ‘பாய் மீட்ஸ் கேர்ள்’ கதைப் புத்தகங்கள், கேர்ள் ஃப்ரண்ட்ஸ், மாட்னி ஷோ - இப்படி எவ்வளவோ இருக்கும்போது படிப்பு ஒன்றை மட்டும் கட்டிக் கொண்டு அழ யாரால் முடியும்? யாரால் முடிந்தாலும் நம் ஆர்.எஸ்.ராஜாவுக்கு அந்தத் தாகமெல்லாம் வருவதற்குக் குறைந்த பட்சம் அவன் சோற்றுக்கு லாட்டரி அடிக்கிற ஏதாவதொரு ஏழைக் குடும்பத்திலாவது பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டுமோ என்னவோ?

(கல்கி, 15.11.1964)