பக்கம்:நித்திலவல்லி.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

நித்திலவல்லி / முதல் பாகம்



பெருமாள் மாளிகைக்குள் செல்லும் வழியைத் திறந்த பின்பே சந்தன நறுமணத்தின் காரணம் புரிந்தது. ஏறிப் பார்த்த போது, மிகப் பெரிய வட்டமான சந்தனக் கல்லை இட்டு அந்த வழியை அடைத்திருந்தார்கள். மாளிகையின் சந்தனம் அரைக்கும் இடத்திற்கு அவர்கள் வந்திருந்தார்கள். வழி மறையும் படி கல்லை மறுபடி பொருத்திய பின், மேலே நின்று பார்த்த போது அந்த வட்ட வடிவச் சந்தனக் கல்லுக்குக் கீழே ஒர் இரகசிய வழி இருக்க முடியும் என்று நம்பவே முடியாமலிருந்தது. கல்லின் மேல் அரைத்த சந்தனமும் சிறிது இருந்தது. பக்கத்தில் ஒரு கலத்தில் நீரும், சந்தனக் கட்டைகளும் கிடந்தன. அங்கு சந்தனம் அரைப்பவர் அமர்ந்து அரைத்துக் கொண்டிருக்கும் போது, புதியவர்கள் வந்து பார்த்தால், அதற்குக் கீழே ஒரு வழி இருக்குமோ என்ற நினைவே எழ முடியாதபடி அதைச் செய்திருந்தார்கள். சுற்றிலும் குடலைகளில் பூக்களும் இருந்தன.

சந்தனம் அரைக்கும் பகுதியிலிருந்து, அவர்கள் மாளிகையின் அலங்காரப் பகுதிகளைக் கடந்து, நடுக்கூடத்திற்கு வந்த போது அங்கே நாலைந்து அழகிய பெண்களுக்கு நடுவே இளமையும் அழகும் ஒன்றை ஒன்று வெல்லும் பேரழகியாக வீற்றிருந்த ஒருத்தி, கை வளைகளும் காற்சிலம்புகளும் ஒலிக்க அவர்களை நோக்கி எழுந்து வந்தாள். அந்தப் பெண்களுக்கு நடுவே அவள் அமர்ந்திருந்த காட்சி, விண்மீன்களுக்கு நடுவே முழுமதி கொலு இருந்தது போல் கம்பீரமாயிருந்தது. செழுமையான உடற்கட்டும், பெண்களுக்கு அழகான அளவான உயரமும் முனிவர்களைக் கூட வசப்படுத்தி மயக்கி விட முடிந்த கண் பார்வையும், சிரிப்புமாக, ஒவ்வோர் அடி பெயர்த்து வைத்து நடக்கும் போதும் ‘இந்த மண்ணில் கால் ஊன்றி நிற்கும் இணையற்ற வசீகரம் நானே’ என்று நிரூபிப்பது போன்ற நடையுடன் அவர்களை எதிர்கொண்டாள் அவள். அந்த அழகு விரிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/101&oldid=945294" இலிருந்து மீள்விக்கப்பட்டது