பக்கம்:நித்திலவல்லி.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

103



ஓர் ஆண்மகனின் முன்னே இன்னோர் ஆண்மகனையும் அருகில் வைத்துக் கொண்டு, மூன்றாவதாக மற்றோர் ஆண்மகனிடம் செம்பஞ்சுக் குழம்பு தீட்டக் கைகளை நீட்டும் நாணமற்ற அவளை வெறுக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ‘அவளாவது கணிகை! இந்த அழகன் பெருமாளுக்கு அறிவு எங்கே போயிற்று? என்னைப் போல் நற்குடிப் பிறப்பு உள்ள ஓர் இளைஞனுக்கு முன், இப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு இவன் அறிவிலியாயிருப்பான் என்று நான் நம்ப முடியவில்லையே?’ என்று இளையநம்பி எண்ணி எண்ணி வேதனையும், கோபமும் கொண்டான். அந்தச் சினத்தை அடுத்த விநாடியே அவன் அழகன் பெருமாளை விளித்த குரலில் கேட்க முடிந்தது;

“அழகன் பெருமாள்! இப்படி வா! உன்னோடு தனியாக சிறிது நேரம் பேச வேண்டும்"-- என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டே சந்தனம் அரைக்கும் பகுதியை நோக்கி நடந்தான் இளையநம்பி. அவனுடைய குரலில் இருந்த கோபத்துக்குக் காரணம் புரியாதவனாக அழகன் பெருமாளும் பின் தொடர்ந்தான். இளையநம்பியின் முகத்திலும் குரலிலும் எள்ளும் கொள்ளும் வெடிப்பது எதற்காக என்பது அவனுக்கு விளங்கவில்லை. இருவரும் சந்தனம் அரைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததும், சுற்றும்முற்றும் பார்த்து அந்த இடத்தின் தனிமையை உறுதிப்படுத்திக் கொண்ட பின், இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கிக் கடுமையான குரலில் கேட்டான்:-

“இங்கே நான் கோநகருக்கு எதற்காக வந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?”

“நன்றாகத் தெரியும்.”

“கொற்கைத் துறையில் குதிரைக் கப்பலை என்றைக்கு எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து சொல்லச் சொன்னால், என்னையும் இங்கு அழைத்து வந்து என் முன்பே ஒரு கணிகையை அலங்கரித்து, அவள் கைகளுக்கு செம்பஞ்சுக் குழம்பு தீட்டச் சொல்கிறாய் நீ... ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/104&oldid=945346" இலிருந்து மீள்விக்கப்பட்டது