பக்கம்:நித்திலவல்லி.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

நித்திலவல்லி / முதல் பாகம்



“ஆமாம்! மறுக்கவில்லை.”

“என்ன நோக்கத்தில் இவற்றை எல்லாம் நீ செய்கிறாய் என்று எனக்குத் தெரிய வேண்டும். அழகுள்ள பெண்களையே நான் இன்றுதான் வாழ்வில் முதன்முதலாகப் பார்க்கிறேன் என்று எண்ணிக் கொள்ளாதே நீ...”

“நான் அப்படி எண்ணியதாக உங்களுக்கு யார் சொன்னார்கள்?”

“பின் யாருக்காக அலங்கரிக்கிறாய் இவளை?”

“உங்களுக்குத்தான்......”

அழகன்பெருமாள் தன் வார்த்தைகளை முடிப்பதற்குள் இளையநம்பியின் உறுதியான கைகள் அவன் கழுத்திற் பாய்ந்து பிடியை இறுக்கின. அந்தப் பிடி தாங்க முடியாமல் அழகன் பெருமாளுக்கு மூச்சுத் திணறியது. கண் விழிகள் பிதுங்கின.

“இது என்ன? நீங்கள் இவ்வளவிற்கு உணர்ச்சி வசப்படுகிறவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லையே? எதற்காக இந்த வீண் ஆத்திரம்? நான் சொல்லியவற்றை எல்லாமே நீங்கள் தவறான பொருளில் எடுத்துக் கொள்கிறீர்கள்.”

“திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையர் மரபில் தவறான பொருள்களை விளையாட்டுக்காகவும் நாடுவதில்லை.”

“ஆனால் விளையாட்டு எது, வினை எது என்று மட்டும் புரியாது போலிருக்கிறது.”

“பரத்தைகளை நாடி அலையும் பலவீனமான ஆடவர்கள் அந்த மரபில் இன்றுவரை இல்லை. அது அவர்களுக்குப் புரியவும் புரியாது.”

“நீங்கள் பலவீனமானவர் என்று யார் சொன்னார்கள்? உங்கள் காரியத்துக்காகத்தான் அவள் அலங்கரிக்கப்படுகிறாள் என்றுதானே சொன்னேன்."--

“இதன் அர்த்தம்?--"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/105&oldid=945347" இலிருந்து மீள்விக்கப்பட்டது