பக்கம்:நித்திலவல்லி.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

111



“கவலைப்படாதீர்கள் ஐயா! கைகளில் சுமந்து செல்லும் வினாக்களுக்கான விடைகளையும், விளக்கங்களையும் இரத்தினமாலை மீண்டும் தன் அழகிய கைகளிலேயே கொண்டு வருவாள். அவள் திரும்பி வந்ததும் நாம் யாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அதுவரை நாம் இங்கேயே காத்திருப்போம்” என்றான் அழகன்பெருமாள் மாறன்.

இரத்தினமாலையின் திறமையைப் பற்றி அழகன் பெருமாள் எவ்வளவோ உறுதி கூறியும், இளையநம்பி அப்போதிருந்த மனநிலையில், அவனால் அதை முழுமையாக நம்ப இயலவில்லை.

அரண்மனையில் போய் அவள் அந்தக் காரியத்தை முடித்துக் கொண்டு வர மேற்கொண்டிருக்கும் தந்திரோபாயத்தை அவன் வியந்தாலும், அவளது வெற்றி தோல்வியைப் பற்றி இப்போதே எதுவும் அநுமானம் செய்ய முடியாமலிருந்தது.

“களப்பிரர்கள் பொல்லாதவர்கள்! கபடம் நிறைந்தவர்கள். சூழ்ச்சியில் பழுத்தவர்கள். கரந்தெழுத்து முறை அவர்களுக்குத் தெரிந்துவிட்டால், இரத்தினமாலையின் தலையே பறி போய் விடும்"-- என்று தன் ஐயப்பாட்டைத் தெரிவித்தான் இளையநம்பி.

ஆனால் ஒரே வாக்கியத்தில் திடமாக அதை மறுத்தான் அழகன்பொருமாள்:--

“நீங்கள் இரத்தினமாலையின் திறமையைக் குறைத்துக் கணக்கிடுகிறீர்கள்...”

“பெண்களின் திறமையை எப்போதுமே நான் பெரிதாகக் கணக்கிட விரும்பவில்லை...”

“அப்படியானால், நீங்கள் பிறர் திறமையையே கணக்கிட விரும்பவில்லை என்றுதான் இதற்கு அர்த்தம் கொள்ளமுடியும்.”

“முத்துப் பல்லக்கில் ஆடல்பாடல்களின் பெயரால் அலங்காரமாக அரண்மனைக்குப் புறப்பட்டுப் போகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/112&oldid=945336" இலிருந்து மீள்விக்கப்பட்டது