பக்கம்:நித்திலவல்லி.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

நித்திலவல்லி / முதல் பாகம்


பெண்ணை அப்படிப் புறப்பட்டுப் போவதற்காகவே திறமைசாலி என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி என்னை வற்புறுத்துகிறாயா அழகன் பெருமாள்?”

“நான் எதையும் வற்புறுத்தவில்லை ஐயா! நீங்களாகவே பின்னால் புரிந்து கொள்ளப்போவதை இப்போதே நான் எதற்காக வற்புறுத்த வேண்டும்?”

இளையநம்பி இதற்கு மறுமொழி சொல்லாமல் சிரித்தான். அழகன்பெருமாளோ விடாமல் மேலும் தொடர்ந்தான்:

“முத்துப் பல்லக்கும், ஆடல்பாடலும் உங்களுக்கு ஏனோ கோபமூட்டுகின்றன?”

“மிகச் சிறியவற்றிற்காக நான் எப்போதுமே கோபப் படமாட்டேன் அழகன்பெருமாள்--”

“கோபப்பட மாட்டேன் என்று நீங்கள் சொல்கிற தொனியிலேயே கோபம் தெரிகிறதே ஐயா!”

“அது உன் கற்பனை."--

“கற்பனைக்கும் எனக்கும் வெகுதூரம்"-- என்று அவனைப் போலவே தானும் பதில் சொன்னான் அழகன் பெருமாள். இவ்வளவில் அவர்கள் உரையாடல் மேலே தொடராமல் அப்படியே நின்று போயிற்று.


17. என்னென்னவோ உணர்வுகள்

மதுரை நகரில் இருந்து மோகூர் திரும்பிய இரவில் செல்வப் பூங்கோதையின் கண்கள் உறங்கவே இல்லை. தந்தை வந்து ஆறுதல் கூறிய பின்பும் அவள் மனம் அமைதி அடையவில்லை. மதுராபதிவித்தகர் தன் தந்தையிடம் கூறியிருந்த அந்த வாக்கியங்களை எண்ணியே அவள் மனம் கலங்கிக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/113&oldid=715273" இலிருந்து மீள்விக்கப்பட்டது