பக்கம்:நித்திலவல்லி.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


18. இன்னும் ஒரு விருந்தினர்

தாயும் மகளும் நீராடி வீடு திரும்பியபோது மாளிகை வாயிலில் வேற்றூரைச் சேர்ந்தவன்போல் தோன்றிய ஒருவனோடு பெரிய காராளர் உரையாடிக் கொண்டிருந்தார். வந்து உரையாடிக் கொண்டிருந்தவனுக்கு அவ்வளவு முதுமை என்று சொல்லிவிட முடியாது. இளமை என்று கருதவும் வாய்ப்பில்லை. இளமையைக் கடந்து முதுமையின் எல்லையை இன்னும் தொடாத வயது. நீண்ட நாட்களாகவே காட்டில் வாழ்ந்தவன் ஒருவனின் சாயல், வந்து பேசிக் கொண்டிருந்தவனிடம் தென்பட்டது. புலித்தோலால் தைத்த முரட்டு அங்கி ஒன்றை அணிந்திருந்தான் அவன். வந்திருந்த புதியவனாகிய அவனுக்கும் தன் தந்தைக்கும் எதைப்பற்றியோ கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதைச் செல்வப் பூங்கோதை அறியமுடிந்தது. வந்திருந்தவனால் எதையும் மெல்லிய குரலில் பேச முடியவில்லை. காற்றைக் கிழிப்பது போல் கணீரென்ற குரல் வாய்த்திருந்தது வந்திருந்தவனுக்கு. கண்களிலும், முகத்திலும் இரண்டாவது முறை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சுகிற ஒரு குரூரம் இருந்தது. நீராடி வந்த கோலத்தில் அங்கே அதிக நேரம் நிற்க முடியாததால் செல்வப் பூங்கோதை உடனே தாயுடன் உள்ளே சென்று விட்டாள். எனினும் தன் தந்தைக்கும் அந்தப் புதிய மனிதனுக்கும் நிகழ்ந்த வாக்கு வாதத்தை அவள் உட்புறம் இருந்தே கேட்க முடிந்தது. தந்தையின் மெல்லிய குரலே முதலில் ஒலித்தது.

“உங்களை நான் இதற்கு முன்பு எப்போதும் இங்கு பார்த்ததில்லை. நீங்களோ நெடுநாள் பழகி அறிந்தவர் போல் உறவு கொண்டாடித் தேடி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன மறுமொழி சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/119&oldid=715275" இலிருந்து மீள்விக்கப்பட்டது