பக்கம்:நித்திலவல்லி.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

11

 உறவு சொல்லிக் கொள்வது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே மோகூரில் நுழைந்தான் இளையநம்பி.

கணீரென்ற மறை ஒலிகள் ஏறியும் இறங்கியும் சுருதி பிறழாமல் ஒலித்துக் கொண்டிருந்த அந்தணர் வீதியில் நுழைந்து எதிர்ப்பட்ட முதியவர் ஒருவரிடம்-

“ஐயா, பெரியவரே! நான் மதுராபதி வித்தகரைக் காணவேண்டும். அருள்கூர்ந்து இப்போது அவர் எங்கே தங்கி இருக்கிறார் என்பதைக் கூறினால் பேருதவியாக இருக்கும்” என்று தணிந்த குரலில் வினவினான் அவன். தான் இவ்வாறு வினவியதும் அந்த முதியவர் நடந்து கொண்ட விதம் அவனுக்குப் புதிராக இருந்தது. அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஒருகணம் தயங்கியபின் சிரித்துக்கொண்டே போய்விட்டார் அவர். இளையநம்பிக்குக் கடுஞ் சினம் மூண்டது. அடுத்து எதிர்ப்பட்ட மற்றொருவரை வினாவிய போதும் அவரும் அவனை ஏறிட்டுப் பார்த்து ஒருகணம் தயங்கியபின் வேகமாக நடந்து விட்டார்.

எதிர்ப்படுகிறவர்கள் கண்டு பேசத் தயங்கும்படி தன் முகத்தில் அப்படி என்ன மாறுதல் நேர்ந்திருக்க முடியும் என்பது அவனுக்குப் புரியவில்லை. கதைகளில் வருகிற அசுரர்கள் முகம் போல் திடீரென்று தன் கடைவாய்ப் புறங்களில் சிங்கப் பற்களோ, அல்லது முன் தலையில் எம கிங்கரர்களின் கொம்புகள் போல் கோரத் தோற்றமோ உண்டாகிவிட்டதோ என்று கூடச் சந்தேகமாயிருந்தது. பாட்டனாரோ --

“மோகூரில் போய்த்தான் வித்தகர் இருக்குமிடத்தை நீ அறிந்துகொள்ள முடியும்! பெரியவர் மோகூர் வட்டத்தில் இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். நீ வரப் போகிறாய் என்பதையும், உன்னை எப்படி எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் அவருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் சொல்லியனுப்பியிருக்கிறேன். கவனமாக நடந்துகொள்! எங்கு பார்த்தாலும் களப்பிரர்களின் ‘பூதபயங்கரப்படை’ நம் போன்றவர்களைப் பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/12&oldid=714829" இலிருந்து மீள்விக்கப்பட்டது