பக்கம்:நித்திலவல்லி.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


20. கோட்டை மூடப்பட்டது

காத்திருக்கிறோம் என்ற கவலையும் களைப்பும் தெரியாமலிருக்க அங்கிருந்த இளம் பெண்கள் சிலர், குரவைக்கூத்து ஆடி இளையநம்பியை மகிழச் செய்தனர். ஆயர்பாடியில் மாயனாகிய திருமாலிடம் இளம் நங்கையர் ஊடினாற் போன்ற பிணக்கு நிலைகளையும், காதல் நிலைகளையும் சித்திரிக்கும் அபிநயங்களை அவர்கள் அழகுற ஆடிக் காட்டினர்.

மாலை முடிந்தது; இரவு நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்கள் அன்பும் இனிமையும் நிறைந்த வார்த்தைகளில் உபசாரம் செய்து படைத்த உணவையும் உண்டாயிற்று. இன்னும் இரத்தினமாலை திரும்பி வரவில்லை. இளையநம்பி அழகன் பெருமாளைக் கேட்டான்:

“ஏன் நேரமாகிறது? மாலையிலேயே அவள் திரும்பிவிடுவாள் என்றல்லவா நீ கூறியிருந்தாய்?”

“சில சமயங்களில் மறுநாள் வைகறையில் திரும்புவதும் உண்டு. போன காரியம் முடியாமல் அவள் திரும்பமாட்டாள். நம்முடைய வினாக்களுக்கு மறுமொழி தெரிந்து அதைச்சமயம் பார்த்துக் கைகளில் எழுதச் செய்து கொண்டு தானே அவள் திரும்ப முடியும்?”

“அகால வேளையில் இரவு நெடுநேரமான பின்பு இங்கே திரும்ப முடியுமா?”

“எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனென்றால் இந்த வீதியில் இரவுக்கு அமைதி கிடையாது. இரவிலும் இங்கே ஆரவாரங்கள் உண்டு. இரத்தினமாலை ஒரு வேளை அகாலத்தில் திரும்பி வந்தாலும் தெரிய வேண்டிய செய்திகள் நமக்குத் தெரியும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/128&oldid=715339" இலிருந்து மீள்விக்கப்பட்டது