பக்கம்:நித்திலவல்லி.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

நித்திலவல்லி / முதல் பாகம்



-இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே மாளிகையின் வாயிற் கதவு பலமாகத் தட்டப்பட்டது. இரத்தினமாலைதான் திரும்பி வந்திருக்க வேண்டும் என்று பணிப் பெண்கள் ஓடிப் போய்க் கதவுகளைத் திறந்தார்கள். ஆனால், கதவைத் திறந்ததுமே வந்திருப்பது இரத்தினமாலையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

குறளன்தான் திரும்பி வந்திருந்தான். அவன் முகத்தில் இயல்பை மீறிய பரபரப்புத் தென்பட்டது. நிறைய ஓடியாடிக் களைத்திருந்த சோர்வும் தெரிந்தது. அவனை அமைதியடையச் செய்து, பேச வைக்கவே சில கணங்களாயிற்று. பின் அவன் அழகன்பெருமாளை நோக்கிச் சொல்லலானான்:

“ஐயா! அவிட்ட நாள் விழாவை ஒட்டி நகருக்கு வந்த கூட்டத்தில் யாரோ ஓர் ஒற்றன் நேற்று, பிடிபட்டு விட்டானாம். யாத்திரீகர்கள் தங்கும் இடமாகிய வெள்ளியம்பலத்துக்கு அருகே அவனைப் பிடித்தார்களாம். இன்று காலை அதே இடத்திற்கு அருகே இன்னும் ஓர் ஒற்றன் அகப் பட்டானாம். அதனால் திடீரென்று வெள்ளியம்பலத்தில் தங்கியிருந்த யாத்திரீகர்களை எல்லாம் விரட்டி விட்டுக் கோட்டையின் நான்கு புறத்து வாயில்களையும் உடனே மூடச் சொல்லி உத்தரவிட்டு விட்டார்கள். அகநகர் முழுவதும் ஒரே பரபரப்பு யாரும் அகநகரிலிருந்து வெளியேறவும் முடியாது. வெளியேயிருந்து அகநகருக்குள் புதிதாக வரவும் முடியாது. ஒவ்வொரு கோட்டை வாயிலாக அலைந்து போய்ப் பார்த்து விட்டுத்தான் ஏமாற்றத்தோடு இங்கே திரும்பி வந்தேன்.

“எப்போது முதன்முதலாகக் கோட்டைக் கதவுகளை அடைத்தார்கள்?”

“நடுப்பகலிலிருந்தே அடைக்கத் தொடங்கி விட்டார்கள் போலிருக்கிறது. இது தெரிந்திருந்தால் நான் போயே இருக்க வேண்டாம்.”

“ஐயோ! அப்படியானால் நம்மவர்கள் காரி, கழற்சிங்கன், சாத்தன், செங்கணான் நால்வரும் எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/129&oldid=945326" இலிருந்து மீள்விக்கப்பட்டது