பக்கம்:நித்திலவல்லி.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

129


உபவனத்துக்குத் திரும்புவார்கள்? நீ கூறுவதிலிருந்து வெள்ளியம்பலத்துப் பக்கம் போய் அந்த நிலவறை வழியையும் வெளியேறுவதற்குப் பயன்படுத்த முடியாது என்று தெரிகிறது.”

“முடியவே முடியாது! வெள்ளியம்பலத்தைச் சுற்றிலும் உருவிய வாளுடன் பூத பயங்கரப்படை காவலுக்கு நிற்கிறது.”

“பூத பயங்கரப்படை காவலிருப்பது தெரியாமல் அவர்கள் வெள்ளியம்பலத்துக்குப் போய்விட்டு அங்கே அகப்பட்டுக் கொள்ளப் போகிறார்களே, பாவம்?” என்று இளையநம்பி வருந்திக் கூறியபோது-

“ஒருபோதும் அவர்கள் எதிரிகளிடம் அகப்பட மாட்டார்கள். தந்திரமாகத் தப்பி நான்கு பேரும் சேர்ந்தோ, தனித்தனியாகவோ, இங்கே வந்து சேர்வார்கள்” என்று உறுதி கூறினான் அழகன் பெருமாள் மாறன்.

“அதெப்படிச் சொல்லி வைத்தாற்போல் இங்கே வந்து சேருவார்கள் என்று உன்னால் உய்த்துணர முடிகிறது?”

“நான்கு கோட்டை வாயில்களும் மூடப்பட்டு வெள்ளியம்பலத்து நிலவறையிலும் நுழைய முடியாமல் தவிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டால் புற நகரிலுள்ள உபவனத்திற்கு வெளியேறிச் செல்ல மீதமிருக்கும் ஒரே வழி இந்த மாளிகையில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் நால்வரும் நன்கு அறிவார்கள் ஐயா! இந்த மாளிகைக்கு வரும் போது சூழ்நிலைக்கேற்பப் பிறர் ஐயம் அடையாதவாறு வந்து சேர அவர்களுக்குத் தெரியும். இத்துறையில் அவர்கள் மிகவும் செம்மையான முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்” -என்று இளையநம்பிக்கு மறுமொழி கூறிவிட்டுக் கணிகை மாளிகையின் பணிப் பெண்களைக் கூப்பிட்டுப் பெருங்கதவு களை அடைத்துத் தாழிட்டு விட்டு, அவற்றின் நடுவே உள்ள சிறிய திருஷ்டி வாசற் கதவை மட்டும் தாழிடாமல் திறந்து வைக்குமாறு வேண்டினான் அழகன்பெருமாள்.

அந்த மாளிகைப் பெண்களும் அன்றிரவு உறங்காமல் விழித்திருந்தனர். பயத்தினாலும் அகநகரைப் பற்றிக்

நி.வ-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/130&oldid=716216" இலிருந்து மீள்விக்கப்பட்டது