பக்கம்:நித்திலவல்லி.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

நித்திலவல்லி / முதல் பாகம்



மல்லனையும், புதியவனையும் தனியே விடக் கருதியே அவர் இதைச் செய்தார்.

ஆனால் அங்கே புதியவனோடு தனியே சென்ற மல்லனுக்கோ பயமாயிருந்தது. கையிலிருந்த வாளைக் கீழே வைக்காமலேயே எண்ணெய் பூசி நீவிவிடச் சொல்லும் முதல் மனிதனை அவன் இப்போதுதான் சந்தித்தான். அந்தச் சிறு பிள்ளைத்தனமான பாதுகாப்பு உணர்ச்சியை எண்ணி உள்ளூற நகைத்தாலும், தனக்கு என்ன நேருமோ என்ற பயம் எண்ணெய் பூசுகிறவனுக்கு இருந்தது. புலியோடு பழகுகிற மனநிலையில் இருந்தான் அவன். அரையாடையைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு பாறையாகப் பரந்த மார்பும் திரண்ட தோள்களுமாக எண்ணெய் பளபளக்க நின்று அந்த உடலின் வலிமையை எண்ணித் தான் ஒரு மல்லனாயிருந்தும் அந்த ஊழியனால் அஞ்சாமலிருக்க முடியவில்லை. தயங்கித் தயங்கி அவன் வேண்டினான். “அந்த வாளைக் கீழே வைத்தீர்களேயானால் எண்ணெய் பூசிவிட வாகாயிருக்கும்.”

“யாருக்கு வாளுக்கா? எனக்கா?” என்று வந்தவன் சீறியதும், மல்லன் அடங்க வேண்டியதாயிற்று. ஆனாலும் மல்லனுக்கு ஒரு மனநிறைவு இருந்தது. வந்திருப்பவனுடைய உடலில் காராளர் கண்டறியச் சொன்ன அடையாளத்தை அவன் கண்டு விட்டான். உடனே எண்ணெய் பூசுவதை நிறுத்தி விட்டு, உள்ளே ஓடிப் போய்க் காராளரிடம் அதைச் சொல்லிவிட அவன் பரபரப்பு அடைந்தாலும், வந்திருப்பவனுக்கு அது சந்தேகத்தை உண்டாக்கும் என்ற எண்ணத்தில் பொறுமையோடு முழுமையாக எண்ணெய் தேய்த்து முடித்தான்.

எல்லாம் முடிந்த பின் அவன் திரும்பி வந்து காராளரிடம்-

“ஐயா! நீங்கள் கூறிய அடையாளம் அவருடைய வலது தோளில் பழுதின்றி இருக்கக் கண்டேன்” என்று கூறினான். அதைக் கேட்ட பின்பு வந்திருப்பவனை ஒரு தேசாந்திரி போல் கருதி, அறக் கோட்டத்தில் வைத்துச் சோறிடுவதா அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/135&oldid=945334" இலிருந்து மீள்விக்கப்பட்டது