பக்கம்:நித்திலவல்லி.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

நித்திலவல்லி / முதல் பாகம்



மானைத்தவிர மற்றெல்லா மான்களும் தலை தெறிக்க ஓட்டம் எடுப்பதைக் கண்டு நிமிர்ந்து பார்த்த போது புலித்தோல் அங்கியோடு கூடிய அந்த மனிதனுடன், மல்லன் அங்கே வந்து கொண்டிருந்தான். வந்து கொண்டிருப்பவனுடைய புலித்தோல் அங்கி மேய்ந்து கொண்டிருந்த மான்களை மருட்டி விரட்டுவதை எண்ணி உள்ளூறச் சிரித்துக் கொண்டே,

“வா! வா! ‘ஏதடா தென்னவன் மாறன் இன்று வர வேண்டுமே! இன்னும் காணவில்லையே’ என்று நானும் இவ்வளவு நேரமாக உன்னைத்தான் எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னுடைய புலித்தோல் உடையே இங்கு மேய்ந்து கொண்டிருந்த மான்களை விரட்டியதுபோல், களப்பிரர்களையும் இங்கிருந்து விரட்டிவிடப் போதுமானது என்று நினைக்கிறாய் போலிருக்கிறது” என்றார் பெரியவர். மறுமொழி கூறாமல் அவர் முன்னிலையில் ஒரு புலி கிடந்து வணங்குவது போல் தரை மண் தோய வணங்கினான் ‘தென்னவன் மாறன்' என்று குறிக்கப்பட்ட அந்த மனிதன். அப்போது மிக அருகே தென்பட்ட அவனுடைய புலித்தோல் அங்கியைக் கண்டு பெரியவர் கைகளின் தழுவலில் இருந்த அந்தப் புள்ளி மானும் மருண்டு ஓடத் திமிறியது. அவர் அதை விடுவித்தார். வலது கையை உயர்த்தி அவனை வாழ்த்தினார்.

தன்னிடம் ‘அவர்கள் இருவரும் பேசும்போது நீ அருகே இருக்க வேண்டாம்’... என்று காராளர் கூறியனுப்பியிருந்ததற்கு ஏற்ப மல்லன் விலகி நின்று கொண்டான். ஆனாலும் பெரியவரையும் அவரைக் காண வந்திருந்த புதியவனையும் தெளிவாகக் கண்காணிக்க முடிந்த தொலைவில்தான் நின்று கொண்டிருந்தான். காராளரும் மல்லனுக்கு அப்படித்தான் சொல்லியனுப்பி இருந்தார். உரத்த குரலை உடையவனாக இருந்ததால், தென்னவன் மாறன் என்னும் அந்தப் புதிய மனிதன் கூறிய மறுமொழிகள் மல்லன் நின்று கொண்டிருந்த இடம் வரையிலும் கேட்டன. ஆனால் மதுராபதி வித்தகர் அவனை வினாவிய வினாக்கள் மட்டும் அவ்வளவு தெளிவாகக் கேட்கவில்லை. “ஐயா! தென்னவன் சிறு மலையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மட்டும் ஈராயிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/139&oldid=945325" இலிருந்து மீள்விக்கப்பட்டது