பக்கம்:நித்திலவல்லி.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

நித்திலவல்லி / முதல் பாகம்



அவர்களும் மேலே நடந்தார்கள். காராளர் அருகே வந்ததும் பெரியவருக்கு எதிரே தயங்கி நின்றார்.

“என்ன நடந்தது?”

“நேற்றிரவும், இன்று காலையிலும் இரண்டு ஒற்றர்கள் பிடிபட்டதன் காரணமாக, வெள்ளியம்பலப் பகுதியிலும் பிற பகுதியிலும் அவிட்ட நாள் விழாவுக்காக வந்திருந்த யாத்திரிகர்களை வெளியேற்றிவிட்டு, மிகவும் பதற்றமான நிலையில் நண்பகலிலேயே களப்பிரர்கள் கோட்டைக் கதவுகளை மூடி விட்டார்களாம்.”

“இரவு உங்கள் செல்வப் பூங்கோதை யாரோ ஒற்றன் வெள்ளியம்பலத்தருகே பிடிபட்டதாகச் சொன்ன போதே நான் இதை எதிர்பார்த்தேன். உப வனத்திலுள்ள நம்மவர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்களா?”

“யானைப் பாகன் அந்துவன் காலைவரை அவர்கள் பாதுகாப்பைப் பற்றி உறுதி கூறியனுப்பியிருக்கிறான். பகலுக்கு மேல்தான் கோட்டை வாயில்கள் அடைக்கப் பட்டிருக்கின்றன.”

“பிடிபட்டிருக்கும் அந்த இருவர் மூலம், நம்மவர்கள் பல்லாயிரக் கணக்கில் யாத்திரிகர்கள் என்ற பெயரில் ஓர் உட்பூசலை எழுப்பும் நோக்குடன் கோ நகருக்குள் வந்திருந்தார்கள் என்ற இரகசியம் வெளிப்படலாம் என்னும் கவலை உங்களுக்கு இருக்கிறதா?”

“அறவே இல்லை. சித்திரவதையே செய்தாலும் நம்மவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கத் துணியவும் மாட்டார்கள்.”

“இப்படி இந்த அவிட்ட நாள் விழாவன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஓர் உட்பூசலுக்கு முயலும் நோக்குடன் நம்மவர்கள் ஆயிரக் கணக்கில் அகநகரில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை நாம் இளையநம்பியிடம் கூடச் சொல்லியனுப்பாதது நல்லதுதான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/143&oldid=945317" இலிருந்து மீள்விக்கப்பட்டது