பக்கம்:நித்திலவல்லி.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

145


சந்தனக்கல் விலகியதும் பிறவியிலேயே சிரிப்பு மாறாதயானைப்பாகன் அந்துவனின் முகம் தெரிந்தது அங்கே. அவன் ஒரே அவசரத்திலும் பரபரப்பிலும் இருந்தான். மேலே படியேறி வராமல் தலையை மட்டும் நீட்டியே அங்கிருந்து விஷயத்தைக் கூறத் தொடங்கினான் அவன்.

“உங்களுக்குச் சில செய்திகளைக் கூறி எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே நான் வழக்கமாகத் திருமஞ்சனக் குடத்தோடு வைகைத் துறைக்குப் புறப்படும் நேரத்திற்குச் சில நாழிகைகள் முன்பாகவே இன்று காலையில் புறப்பட்டேன். இன்னும் சில நாட்களுக்கு நீங்கள் யாருமே உபவனத்துக்குத் திரும்ப வேண்டாம். உபவனமும் பூத பயங்கரப் படையின் கண்காணிப்பில் இருக்கிறது. திருமருத முன்துறையில் யானையை நிறுத்தி விட்டு உடன் வந்த பாகனிடம் நீராடி வருவதாய்ப் பொய் சொல்லிவிட்டு நீந்தியே உபவனக்கரையில் ஏறிப் பதுங்கிப் பதுங்கி மறைந்து நிலவறையில் நுழைந்து இங்கே ஓடி வருகிறேன். விரைந்து நான் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் மற்றவன் என்னைச் சந்தேகப்படுவான்.”

அவர்களும் அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு உடனே அவனைத் திரும்பிப் போக விட்டு விட்டார்கள். அவனுடைய கடமை உணர்வை எல்லாருமே பாராட்டித் தங்களுக்குள் மகிழ்ந்து கொண்டனர். அவனை அங்கே தாமதப் படுத்தும் ஒவ்வொரு கணமும் அவனுயிருக்கு அபாயம் தேடு வதாகும் என்று அவர்களுக்கு மிக நன்றாகப் புரிந்திருந்தது. யானைப்பாகன் அந்துவன் ஒரு மின்னலைப் போல் வந்து தோன்றித் திரும்பிய பின், “இந்த மாறுபட்ட நிலைமைகளால் இரத்தினமாலை திரும்பவருவது பாதிக்கப் படுமா?” என்று அழகன் பெருமாளைக் கேட்டான் இளையநம்பி.

“நாம் இப்போது கவலைப்பட வேண்டியது உபவனத்திலிருந்து காலையில் நகருக்குள் வந்திருக்கும் நம்முடைய நண்பர்களைப் பற்றியதாக இருக்க வேண்டுமே அன்றி இரத்தினமாலையைப் பற்றியதாக இருக்க வேண்டிய தில்லை!”

நி.வ-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/146&oldid=715353" இலிருந்து மீள்விக்கப்பட்டது