பக்கம்:நித்திலவல்லி.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

147



தருகிறவன் மனத்தை ஏமாற்ற விரும்பாமல் இளையநம்பியும் சிறிதளவு சந்தனத்தை ஏற்றுப் பூசிக் கொண்டான். குறளனோ, தானே முன்வந்து அவனுடைய பொன்நிற முன் கைகளில் சந்தனத்தைப் பூசி விடவே தொடங்கி விட்டான்.

“இந்தச் சந்தனத்தைப் பூசு முன்பே, உங்கள் கைகள் இயல்பாகவே மணக்கின்றன ஐயா! இந்தச் சந்தனத்தின் நிறத்திற்கும், உங்கள் மேனி நிறத்திற்கும், நான் வேறுபாடு காண்பது முடியாத காரியமாயிருக்கிறது” -என்றெல்லாம் குறளன் புகழ்ந்த புகழ் வார்த்தைகள, இளையநம்பியை நாணப்படச் செய்தன. அழகன் பெருமாளும், இளைய நம்பியும், சந்தனக்கல் இருந்த அறையிலிருந்து மாளிகையின் கூடத்திற்கு வரவும், வெளிப்புற வாயிலில் முத்துப் பல்லக்கு வந்து சேரவும் ஒன்றாயிருந்தது. அழகன் பெருமாள் களிப்போடு கூறினான்:-

“பார்த்தீர்களா! நம்முடைய புகழ் பெற்ற பொதிகை மலைச் சந்தனத்தைப் பூசிக் கொண்டால், நாம் எதிர் பார்க்கிற மங்கல நிகழ்ச்சிகள் உடனே நடைபெறும் என்று நான் கூறியது எவ்வளவு பொருத்தமாய் நிகழ்கிறது.”

அப்போதுதான் துயிலெழுந்து வந்த மயில் போல் அழகாய்ப் பல்லக்கிலிருந்து இறங்கி வந்தாள் இரத்தின மாலை. அவர்கள் தன்னை எதிர்கொள்ளக் கண்டு, புன் முறுவல் பூத்து முக மலர்ந்தாள் அவள்.

அழகு மின்னும் இளமூங்கிலாய்த் திரண்ட அவள் தோள்களையும், கைகளையுமே பார்க்கத் தொடங்கியிருந்த இளையநம்பி அந்த உள்ளங்கைகள் பளிங்கு போல் வெண்மையாயிருந்ததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தான். அழகன் பெருமாளுக்கும் ஏமாற்றமாயிருந்தது, சிலம்பொலி குலுங்கத் தென்றல் அசைந்து வருவது போல பணிப்பெண் பின் வர வந்து கொண்டிருந்த அவளை நோக்கி,

“என்ன இது? நீ மறு மொழியோடு வருவாய் என்றல்லவா எதிர்பார்த்தேன், இரத்தினமாலை?” என்று வினாவினான் அழகன் பெருமாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/148&oldid=945299" இலிருந்து மீள்விக்கப்பட்டது