பக்கம்:நித்திலவல்லி.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

நித்திலவல்லி / முதல் பாகம்


இப்படி மீண்டும் அந்தக் கொல்லன் புதிராகிவிடவே இளையநம்பிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தனக்கு மறுமொழி கிடைக்கவில்லையே என்று ஆத்திரமாக இருந்தாலும் களப்பிரர்களையும், பாலிமொழியைப் பாண்டிய நாட்டில் வலிந்து புகுத்த முயலும் அவர்கள் கொடுமையையும் தன்னைப் போலவே அவனும் எதிர்ப்பது இளையநம்பிக்கு ஆறுதலளிக்கக் கூடியதாயிருந்தது. களப்பிரரை வெறுக்கும் தோள் வலிமை வாய்ந்த வினை வல்லான் ஒருவனை முதல் முதலாகச் சந்தித்துவிட்ட மகிழ்ச்சியோடு நடந்தான் அவன்.

இன்னும் அவன் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கான வழியை அறிந்துகொள்ள முடியவில்லை. மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தை அறிவதில் இவ்வளவு இடர்ப்பாடுகள் வரும் என்பது அவன் முற்றிலும் எதிர்பாராதது. நடந்துகொண்டே இருந்தவன் வீதியில் தனக்கு முன்னால் இரண்டு பாக தூரத்தில் ஒரு பெண் கையில் திருவிளக்கு ஏந்திச் செல்வதைக் கண்டான்.

அவள் காலணிகளின் பரல்கள் எழுப்பிய ஒலி அந்த வீதியின் தனியான சங்கீதமாயிருந்தது. மேகலையிட்டுக் கட்டியிருந்ததாலோ என்னவோ அவளது இடை இல்லையோ உண்டோ என்று நினைக்கும்படி சிறிதாகத் தோன்றியது. பூச்சூடிய கருங்குழலும், விளக்கேந்திய கையுமாக அவள் நடந்து சென்ற பின்னலங்காரத்தில் ஒரு கணம் மயங்கி அடுத்தகணமே தன்னுணர்வு பெற்று அவளைக் கை தட்டிக் கூப்பிடலாமா, அல்லது அருகே சென்று கேட்கலாமா என்று சிந்தித்தான். இருள் மயங்கும் வேளையில் தெருவில் தனியே செல்லும் இளம் பெண்ணைத் தன்னைப்போல் ஊருக்குப் புதிய இளைஞன் கைதட்டிக் கூப்பிடுவது நயத்தக்க நாகரிகமாக இராதென்றும் தோன்றியது. படமெடுத்த நிலையில் அரச நாகம் ஒன்று நடந்து செல்வதுபோல் மேகலைக்குக்கீழே அவள் நடையின் பின்னலங்காரத்தைக் கண்டபடியே எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து போகலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/15&oldid=713011" இலிருந்து மீள்விக்கப்பட்டது