பக்கம்:நித்திலவல்லி.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

149



“அங்கே கோட்டைக்குள்ளும் அரண்மனையிலும் கூடச் சோதனைகள் அதிகமாக இருக்கின்றன. நான் நேற்று இரவிலேயே திரும்ப முடியாமற் போனதற்குக் காரணமே அரண்மனைச் சூழ்நிலைதான். நேற்றுப் பகலில் நான் அரண்மனைக்குப் புறப்பட்ட போதே நகரில் பரபரப்பான நிலைமை உருவாகி விட்டது. என்ன நேருமோ என்ற பயத்தின் காரணமாகக் களப்பிரர்கள் கோட்டைக் கதவுகளை உடனே அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள். அரண்மனைக்குள் போகிறவர்கள், வருகிறவர்கள் கடுமையான கண்காணிப்பிற்கு ஆளாகிக் கொண்டிருந்த போதுதான் அங்கே நானும் போய்ச் சேர்ந்திருந்தேன்.”

“அப்புறம்...? என்ன நடந்தது?”

“என்ன நடக்கும்? இந்த இரத்தினமாலை சென்ற பின்பும், திறக்காத அரண்மனைக் கதவுகள் ஏது? இந்த விழிகளைச் சுழற்றியும், இந்தப் புன்சிரிப்பைக் காண்பித்தும் நான் எங்கும் எதற்கும் தோற்க நேர்ந்ததே இல்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே?”

“ஆனால், இப்போது தோற்றுவிட்டு வந்திருக்கிறாய் என்றல்லவா தோன்றுகிறது?”

“அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்! நான் இப்போது முழு வெற்றியில் காலூன்றி நிற்கிறேன்” என்று கூறியபடியே அழகியதொரு கூத்துக்கு அபிநயம் செய்வது போல், அவள் தனது வலது பாதத்தை மேலே தூக்கினாள், என்ன ஆச்சரியம்? கைகளில் இல்லாததை அவள் உள்ளங் காலில் காண முடிந்தது அப்போது! செந்தாமரைப் பூவின் அகஇதழ் போல் வெண் சிவப்பு நிறத்தில் விளங்கிய அந்த உள்ளங்காலில் அவர்களுக்கு வேண்டிய விடை இருந்தது. சித்திரம் போல் கரந்தெழுத்துக்கள் அங்கே இருந்தன. “மூன்று ஆண் மக்களுக்கு முன் வெட்கமில்லாமல் இப்படிக் காலைத் தூக்குகிறாளே இவள்"- என்று சிறிதே சினம் அடையத் தொடங்கியிருந்த இளையநம்பியின் கண்களும் கூட இப்போது வியப்பினாலும் மகிழ்ச்சியினாலும் மலர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/150&oldid=945327" இலிருந்து மீள்விக்கப்பட்டது