பக்கம்:நித்திலவல்லி.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

நித்திலவல்லி / முதல் பாகம்



இருந்த வினாக்களுக்குக் கால்களில் கிடைத்திருந்த மறுமொழிகள் ஓரளவு அவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பவையாகத்தான் இருந்தன. விடைகளுக்குப் பதில் எச்சரிக்கைகள் பெரும்பாலும் கிடைத்திருந்தன என்றாலும் அவை பயனுள்ள எச்சரிக்கைகளாகவே இருந்தன.

‘சோனகர் நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு இறக்குமதியாகும் குதிரைகள் நிறைந்த கப்பல் கொற்கைத் துறைமுகத்திற்கு எப்போது வந்து சேரும்? அப்படி வந்து இறங்கும் குதிரைகளை எப்படி எப்போது கோநகருக்குக் கொண்டு வரப் போகிறார்கள்? கோநகருக்குக் குதிரைகளைக் கொண்டு வரும் போது, களப்பிரர்கள் அதற்காகச் செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?’ -ஆகிய வினாக்களைத் தான் இவர்கள் கேட்டிருந்தார்கள்.

‘குதிரைகளைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். கொற்கைத் துறையில் கரை இறங்கிய பின்பும் ஒரு மண்டலக் காலத்துக்கும் அதிகமாக அவற்றை அங்கே கொற்கையின் அருகிலுள்ள மணல் வெளிகளிலே பழக்கி வசப்படுத்தப் போகிறார்கள். அப்படிப் பழக்கி வசப்படுத்திய பின்புதான் அவற்றை கோநகருக்குக் கொண்டு வருவதைப் பற்றியே சிந்திப்பார்கள். இப்போது நீங்கள் செய்ய வேண்டிதெல்லாம் சிறிது காலம் மிக எச்சரிக்கையாகவும், தலைமறைவாகவும் இருக்க வேண்டியதுதான். ஒற்றர்கள் இருவர் பிடிபட்டதிலிருந்து களப்பிரர்கள் மிகக் கடுமையாகி யிருக்கிறார்கள். எங்கும் எதையும் சந்தேகக் கண்களோடு பார்க்கிறார்கள்’ என்பதுதான் மறுமொழியாகக் கிடைத்திருந்தது. ஏறக்குறைய இதையேதான் வேறு வார்த்தைகளில் காலையில் வந்த யானைப் பாகன் அந்துவனும் சொல்லி விட்டுப் போயிருந்தான். தாங்கள் செய்வதற்கிருந்த காரியங்களையும், இந்த மறுமொழியையும் வைத்துச் சீர் தூக்கிச் சிந்தித்தார்கள் அவர்கள். அழகன் பெருமாள் இந்த எச்சரிக்கையையும் இதற்கு முன்பே கிடைத்திருந்த அந்துவனின் எச்சரிக்கையையும் மிகவும் பொருட்படுத்தினான். இளைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/155&oldid=945311" இலிருந்து மீள்விக்கப்பட்டது