பக்கம்:நித்திலவல்லி.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

நித்திலவல்லி / முதல் பாகம்



களப்பிரர்களுக்குத் தெரிந்து விடும். நிலவறை வழிகள் கண்டு பிடிக்கப்பட்டு விடும். எல்லா நேரங்களிலும் குமுறிக் கொண்டிருப்பது மட்டும் வீரனின் அடையாளமில்லை. சில நேரங்களில் மிகவும் பொறுமையாக இருப்பதும் வீரனின் இலட்சணம்தான்.”

“அழகன் பெருமாள்! இலட்சியங்களைக் காட்டிலும் இலட்சணங்களைப் பற்றியே எப்போதும் அதிகம் கவலைப் படுகிறாய் நீ.”

“உண்மைதான் ஐயா! ஒரு முதல் தரமான இலட்சியத்தை, மூன்றாந்தரமான இலட்சணங்களால் அவசரப்பட்டுத் தொட என்னால் முடியாது. நான் சிலவற்றில் மிகவும் நிதானமானவன். ஆனால், பல ஆண்டுகளாக, இங்கேயே கோநகரில் இருந்து களப்பிரர்களின் போக்கை நன்கு அறிந்திருப்பவன். களப்பிரர்களின் மனப்பான்மையைப் பற்றி அந்தரங்கமாகவும் நம்பிக்கையாகவும் எதை அறிய விரும்பினாலும் பெரியவர் மதுராபதி வித்தகர் கூட அதை அடியேன் மூலம்தான் கேட்டறிவது வழக்கம். அந்த நம்பிக்கை இன்று என்மேலே உங்களுக்கும் வேண்டும்...”

“நீயும் உன் நிதானமும் இங்கு தவிர்க்கப்பட முடியாமல் இருப்பது எனக்குப் புரிகிறது” என்று வேண்டா வெறுப்பாக மறுமொழி கூறினான் இளையநம்பி. அப்போது இரத்தினமாலையும் அழகன் பெருமாளோடு சேர்ந்து கொண்டாள்;

“அரண்மனைப் பெண்களிடமும், அந்தப்புரத்திலும் மிகவும் வேண்டியவள் என்று பெயரெடுத்திருக்கும் என்னிடமே நேற்றிரவு சந்தேகப்பட்டுப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்கள். தந்திரமாகவும், நுண்ணறிவுடனும் கைகளை விடுத்து யாராலும் பார்க்க முடியாதபடி உள்ளங் கால்களில் எழுதி வந்ததால்தான் நான் பிழைத்தேன். இல்லா விட்டால் என் கதியே அதோகதி ஆகியிருக்குமோ என்று பயந்திருந்தேன் நான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/157&oldid=945314" இலிருந்து மீள்விக்கப்பட்டது