பக்கம்:நித்திலவல்லி.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



27. ஊமை நாட்கள்

ஆறாக்கனல்போல் சீறி மேலெழும் அடக்க முடியாத சினத் தோடு வெளியேறுவதற்கு இருந்த இளையநம்பியைக் கைகூப்பி வழி மறித்தாள் இரத்தினமாலை. சற்று முன் அவனுக்குக் கடுமையாக மறுமொழி கூறிச் சாடி அவனைக் குத்திக் காட்டிப் பேசிய போது எவ்வளவுக்கு அவள் பெண் புலியாகக் காட்சியளித்தாளோ அவ்வளவுக்கு அவ்வளவு இப்போது ஒரு பேதையாகி இறைஞ்சி அவனை மன்றாடினாள் அவள்.

“கருணை கூர்ந்து நான் பேசியதில் ஏதாவது பிழையிருந்தால் தாங்கள் பொறுத்தருள வேண்டும். இந்த வீட்டிலோ இந்த வீதியிலோ நீங்கள் கோபப்பட்டுப் பயனில்லை. ஆண்களின் கோபமோ, பிடிவாதமோ வெற்றி பெற முடியாத வீதி இது. பெண்கள் புன்னகைகளாலும் பார்வைகளாலும், நிரந்தரமாக வென்று கொண்டிருக்கும் போர்க்களம் இது ஒருவகைப் பிரியத்தாலும், உரிமையாலும் நான் உங்களிடம் கூறிவிட்ட சில சொற்களைப் பெரிதாக நினைத்து நீங்கள் வைரம் பாராட்டக் கூடாது. உங்கள் அடிமை அழகாகப் பேசி நன்றாக விவாதித்தால் அதில் உங்களுக்குப் பெருமை இல்லையா?”

“தலைவனாக இருப்பவன்தான் யார் யார் தன் அடிமைகள் என்பதை முடிவு செய்ய வேண்டும். இங்கோ அடிமைகளே தங்கள்தலைவன் யார் என்பதையும் கூட முடிவு செய்கிற அளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்...”

“தலைவன் பெருந்தன்மை உடையவனாக இருந்தால் அடிமைகளும்கூடச் சுதந்திரமாய் இருக்கமுடியுமே!”

இந்தச் சொற்களைக் கேட்டு அவளைச் சுட்டெறித்து விடுவதுபோல் ஏறெடுத்துப் பார்த்தான் இளையநம்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/159&oldid=715358" இலிருந்து மீள்விக்கப்பட்டது