பக்கம்:நித்திலவல்லி.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


28. கபால மோட்சம்

அழகன் பெருமாள் மீண்டும் அதையேதான் சொன்னான். ஆனால், கோபப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் சொன்னான்: “காரி, கழற்சிங்கன் முதலிய நால் வரும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பிவந்து சேரக் கூடியவர்கள் என்பதைப் பொறுத்து இப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நகரத்தின் பரபரப்பான சூழ்நிலைக் கேற்ப அவர்கள் முயற்சியையும் மீறி ஏதாவது நடந்திருக்குமோ என்றுதான் இப்போது சந்தேகப்படுகிறேன்.”

இளையநம்பி இதற்கு மறுமொழி கூறவில்லை. புன்முறுவல் பூத்தான். சிறிது நேரம் பொறுத்து அழகன் பெருமாளை நோக்கி,

“உன்னிடம் நம்பிக்கையும் இருக்கிறது! சந்தேகமும் இருக்கிறது! இந்த இரண்டில் எது எப்போது இருக்கிறது என்பதைத்தான் உன்னோடு பழகுகிறவர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை-” என்றான் அவன்.

“சொல்லப் போனால் வாழ்க்கையே இந்த இரண்டிற்கும் நடுவில் எங்கோதான் இருக்கிறது"- என்று அவர்களுடைய உரையாடலில் குறுக்கிட்டாள் இரத்தினமாலை. அவளுடைய இந்த வாக்கியம் தன்னையும் அழகன் பெருமாளையும் ஒன்று சேர்த்து வைக்கும் தொனி உடையதாக இருப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. அவன் உள்ளூற நகைத்துக் கொண்டான். மதுராபதி வித்தகரின் பயிற்சிக்குப் பின் ஓர் இளம் கணிகையும்கூடத் தேர்ந்த அரச தந்திரியாயிருப்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. அதேசமயத்தில் முழுவேகத்துடனே குத்திக் காட்டுவது போலவோ சாடுவது போலவோ ஏதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/165&oldid=715363" இலிருந்து மீள்விக்கப்பட்டது