பக்கம்:நித்திலவல்லி.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

165



பேசினால்தான் அங்கிருந்து கோபித்துக் கொண்டு போய் விடக் கூடும் என்ற எச்சரிக்கையும், அவளுடைய பேச்சுக்களில் இப்போது கலந்திருப்பதை அவன் உணர முடிந்தது. ‘இவ்வளவு பெரிய சாகஸத்துக்குரியவளை உணர்வின் வசப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ள இருந்தோமே'- என்று இப்போது, அவனுக்கே வருத்தமாகவும் வெட்கமாகவும் கூட இருந்தது. கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்ட தினத்தன்று அரண்மனைக்குப் போய் விட்டு வந்தபின், இரத்தினமாலை மறுபடி அரண்மனைக்குப் போகாததால் அரண்மனை ஒற்றர்கள் மூலமும் புதிதாக எதுவும் தெரியவில்லை. உப வனத்து முனையிலும், வெள்ளியம்பல முனையிலும் யாரும் புகுந்து புறப்பட்டு வர முடியாததாலோ என்னவோ நிலவறை மூலமாகவும் செய்திகள் தெரியவில்லை. அந்த மாளிகையில் அவர்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.இப்படியே பல நாட்கள் கழிந்தன.

உணவு முடிந்த பின் அன்றிரவு முதல் முறையாக அழகன் பெருமாளும், இளையநம்பியும், இரத்தினமாலையும் மாளிகையின் நடுக்கூடத்தில் அமர்ந்து வட்டு ஆடிக் கொண்டிருந்தனர். குறளன் சந்தனம் அரைக்கும் பகுதிக்கு உறங்கப் போயிருந்தான். விளையாடத் தொடங்கியவர்கள், இரவு நெடு நேரமாகியும் நிறுத்தாமல், ஆடிக் கொண்டிருந்தார்கள். நள்ளிரவுக்கு மேலும் ஆகிவிட்டது. விளையாட்டில் தொடர்ந்து இரத்தின மாலையின் காய்களே வென்று கொண்டிருந்தன.

“ஆட்டத்தின் காய்கள் கூட அழகிய பெண்களிடம் மயங்கி விடுகின்றன” என்றான் இளையநம்பி.

“ஆனால் ஆடுபவர்கள் ஒருபோதும் மயங்குவதில்லை” என்று உடனே மறுமொழி கூறி விட்டு, அவனை ஓரக் கண்களால் பார்த்தாள் இரத்தினமாலை. அழகன் பெருமாள் இதைக் கேட்டுச் சிரித்தான். அப்போது யாரோ ஓடி வரும் ஓசை கேட்டு விளையாட்டில் கவனமாயிருந்த மூவருமே திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/166&oldid=945306" இலிருந்து மீள்விக்கப்பட்டது