பக்கம்:நித்திலவல்லி.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

169



இழுத்து மேலே எறி” என்று இரத்தினமாலையிடம் கூறினான் அழகன்பெருமாள். அந்தக் கபாலத்தைக் கைகளாலே தொடுவதற்குக் கூசி அருவருப்புக் கொண்டிருந்தாலும், அவள் நடுங்கும் கைகளால் அதைக் கழியோடு பற்றி இழுத்தாள். கீழே அதைப் பிடித்துக் கொண்டிருந்தவன் அழுத்திப் பிடித்துக் கொள்ளாததாலோ, அல்லது அவன் கைகள் தளர்ந்திருந்ததாலோ இரத்தினமாலை பற்றி இழுத்தவுடன் அந்தக் கழியும் கபாலமும் மேலே வந்து விழுந்து விட்டன. ஆனால், அதேசமயம் கீழே நிலவறையில் அதைப் பிடித்திருந்தவன் ஈனக்குரலில் வலி எடுத்து முனகுவது போல் கேட்கவே அவர்கள் நால்வருமே ஏக காலத்தில் வியப்படைந்து விட்டனர்.

உடனே அழகன் பெருமாளுக்கு முற்றிலும் புதியதொரு சந்தேகம் எழுந்தது. அவன் தன் கையிலிருந்த உலக்கையை மூலையில் வைத்து விட்டுத் துணிந்து கீழே நிலவறைக்குள் இறங்கினான். கீழே இறங்கிக் கொண்டு மேற்புறம் இளையநம்பியிடம் இருந்த தீப்பந்தத்தைக் கை நீட்டி வாங்கிப் படி மேல் தளர்ந்து கிடந்தவனைப் பார்த்ததும், “ஐயோ! இதென்ன கோரம்?- உனக்கு இது எப்படி நேர்ந்தது செங்கணான்?” என்று கதறாத குறையாக, உருகிய குரலில் வினாவினான் அழகன்பெருமாள். செங்கணானை மேலே தூக்கும் முயற்சிகள் உடன் மேற்கொள்ளப்பட்டன.

நிலவறை வழியின் ஏதோ ஒரு முனையிலிருந்து, அதைக் கண்டுபிடித்து அந்த மாளிகையைக் கைப்பற்றுவதற்காகக் களப்பிரர்கள் பூத பயங்கரப் படை வீரர்கள் சிலரை அனுப்பியிருக்கக் கூடுமோ என்ற பயத்துடனேயே அந்த விநாடி வரை கவலைப்பட்டுக் காரியங்களைச் செய்த அவர்களுக்கு, இப்போது படவேண்டிய கவலையும் வருத்தமும் வேறாக இருந்தது. தோளிலும் முன் கைகளிலும் இரணகளமாய் இரத்தம் பீறிட்டுப் பாயக் காயமுற்று வந்து சேர்ந்திருந்த தேனூர் மாந்திரீகன் செங்கணானைத் தன் கைகளால் மேலே தூக்கினான் அழகன்பெருமாள். இளையநம்பி மேற்புறமிருந்து கைத்தாங்கலாகச் செங்கணானின் உடலை வாங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/170&oldid=945318" இலிருந்து மீள்விக்கப்பட்டது