பக்கம்:நித்திலவல்லி.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

171



பூங்கைகளும் வருந்த அன்றிரவு உழைத்ததைப் பார்த்த போது, இளையநம்பியின் மனம் அவளிடம் கருணை மயமாய் நெகிழ்ந்தது. இளகி இணைந்தது.

கோநகரில் கணிகையரின் சிரிப்புக்கும், அன்புக்கும் கூட விலை உண்டு என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் கண் காணவே என்ன கேள்விப்பட்டிருந்தானோ, அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை. அந்த மாளிகையில் தான் தங்கியிருந்த நாட்களில் காரணமின்றி, அந்த இளம் கணிகையைச் சந்திக்கும் முன்பே, அவள் மேல் தன் மனம் கொண்டிருந்த வெறுப்பு மாறி, நம்பிக்கை வரப் பெற்றிருந்தாலும் செங்கணானுக்கு உதவிய இரவில், இளையநம்பிக்கு அவள் மேல் இனம் புரியாத பாசமே உண்டாகியிருந்தது. இவளைச் சந்திக்கும் முன், ஒரு குறும்புக்காக இவளைக் குறைத்துப் பேசிய தன்னுடைய சொற்களைக் கேட்ட போதெல்லாம் அழகன் பெருமாள் ஏன் உடனே சினந்து சீறினான் என்பது இப்போது இளையநம்பிக்கு நன்றாகப் புரிந்தது.

‘ஆண்கள் செய்யவேண்டிய காரியங்களையே இங்கே பெண்கள்தான் செய்தாக வேண்டியிருக்கிறது' என்று இரத்தினமாலை தன்னைக் குத்திக் காட்டிப் பேசிய போது கூட அவளைத் தான் புரிந்து கொள்ளாத காரணத்தால், ‘அளவுமீறி அவளிடம் சினம்கொண்டு விட்டோமோ' என்று இப்போது எண்ணிக் கொண்டான் அவன். புண்பட்டு வந்திருக்கும் ஒருவனிடம் அவள் காட்டிய பரிவு, அவளிடம் அவன் பரிவு கொள்ளச் செய்வதாயிருந்தது; மிகவும் கனிவு கொள்ள வைப்பதாயிருந்தது.

மறுநாள் விடிந்ததும் தேனூர் மாந்திரீகன் ஓரளவு தெளிவடைந்திருந்தான். அவனிடமிருந்து என்னென்ன செய்திகள் தெரியப் போகின்றன என்று அறியும் ஆவலில் அவர்கள் காத்திருந்தனர். ஓரளவு அவன் பேச முடியும் என்ற அளவிற்கு நிலைமை தேறியிருந்ததை அறிந்து அழகன் பெருமாள் அவனைக் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/172&oldid=945320" இலிருந்து மீள்விக்கப்பட்டது