பக்கம்:நித்திலவல்லி.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

நித்திலவல்லி / முதல் பாகம்



“செங்கணான்! உனக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது? எவரால் ஏற்பட்டது? உன்னோடிருந்த காரி, கழற்சிங்கன், சாத்தான் ஆகியோர் என்ன ஆனார்கள்?”

“எனக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதை அப்புறம் சொல்கிறேன்...! காரி, கழற்சிங்கன், சாத்தான் ஆகிய மூவரும் இங்கே வரவில்லையா? அவர்கள் மூவரும் இங்கே வந்து, உங்களோடு பத்திரமாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? நாங்கள் நால்வருமாக உப வனத்திலிருந்து கோட்டைக்குள் புறப்பட்டுச் சென்ற தினத்தன்று ஆலவாய்ப் பகுதியில், நான் தனியாகப் பிரிந்து சென்றேன். அவர்கள் மூவரும் என்னிடம் விடைபெற்று வெள்ளியம்பலப் பகுதிக்குப் போனார்கள். நண்பகலுக்குச் சிறிது நேரம் இருக்கும்போது இன்னும் சிறிது நாழிகைகளில் கோட்டைக் கதவுகள் மூடப்படலாம் என்பது போன்ற பரபரப்பு ஆலவாய்ப் பகுதியிலேயே தெரிந்தது. யாத்ரீகர்கள் மூட்டை முடிச்சுகளோடு ஓடினர். பூத பயங்கரப் படை அங்கங்கே புகுந்து நெருக்கத் தலைபட்டது. உடனே ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப் போகிறது என்று புரிந்து கொண்டு நான் ஆலவாய்ப் பகுதியிலிருந்தே, கிழக்குக் கோட்டை வாயிலுக்கு விரைந்து, அகநகரிலிருந்து வெளியேறிவிட்டேன். கோட்டைக்கு வெளியேயும் கடுமையான பாதுகாப்பு இருந்தது. என்னைச் சில பூத பயங்கரப்படை வீரர்கள் பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்களோ என்ற ஐயப்பாடு இருந்ததனால், உப வனத்துக்குத் திரும்பாமல் நான் நேரே தேனூருக்குச் சென்றேன்.

தேனூரிலும் என்னை அபாயம் சூழ்ந்திருந்தது. சுற்றுப்புறச் சிற்றூர்களிலும் கோநகரின் உள்ளேயும் ஆயிரக் கணக்கானவர்கள் களப்பிரர் ஆட்சியை எதிர்த்துத் திடீரென்று கலகம் புரியக்கூடும் என்ற அநுமானத்தின் காரணமாகக் களப்பிரர்கள் கடுமையான பாதுகாப்புகளைச் செய்துவிட்டார் கள். நான் தேனூரில் இருந்து பல நாட்கள் வெளியேறவே முடியாமல் போயிற்று. கடைசியில், நேற்று முன் தினம் மாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/173&oldid=945321" இலிருந்து மீள்விக்கப்பட்டது