பக்கம்:நித்திலவல்லி.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

175



கவலைப்படலாம் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது"-- என்றாள்.

“அப்படியானால், அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடும் என்று நினைக்கவும் அவசியமில்லை என்கிறாயா நீ?”

“சந்தேகமென்ன? நான் இப்போது சென்றாலும் யானைக் கொட்டாரத்தில் அவனைக் காண முடியும்!”

“தெய்வ வழிபாட்டுக்குப் போகிற நீ என்ன காரணத்தோடு யானைக் கொட்டாரத்தில் போய் அவனிடம் பேசிக் கொண்டு நிற்க முடியும்?”

“அது நான் படவேண்டிய கவலை. என்னால் முடியும் என்பதால்தான் நான் கவலைப்படாமல் போய்த் திரும்ப, முன் வருகிறேன்.”

“இப்படி வெடுக்கென்று மறுமொழி கூறும்போதெல்லாம்தான் உன்னைக் கடுமையாகக் கோபித்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது இரத்தினமாலை!”

“ஆகா! நிறையக் கோபித்துக் கொள்ளுங்கள். எனக்கும் அது பிடிக்கிறது. திருக்கானப்பேர்க்காரர்கள் முகங்களில் புன்சிரிப்பை விடக் கோபம்தான் அழகாக இருக்கும் போல் தோன்றுகிறது.”

“அப்படியானால் என் கோபத்திற்கு நீ பயப்பட மாட்டாய்! அல்லவா?”

“ஆண்களின் கோபத்தை எப்படி வெற்றி கொள்வதென்கிற இரகசியம் எனக்குத் தெரியும்?”

இதைச் சொல்லும்போது அவள் குரலில் தொனித்த இங்கிதமும், முகத்தில் ஒளிர்ந்த நாணமும், கண்களிலும் இதழ்களிலும் தோன்றி மறைந்த முறுவலும் இளைய நம்பிக்குப் புரிந்தன. அவள் ஒரு தேர்ந்த மந்திரவாதியின் சாகஸ்த்தோடு அவனை மயக்கினாள் அப்போது.

காரணம் புரியாத வெறுப்போடு தொடங்கிய ஒரு நட்பு இப்போது இப்படிக் காரணம் புரியாத மயக்கத்தில் ஆழ்த்தத் தொடங்கியிருந்தது. அவன் மாறியிருந்தான். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/176&oldid=945292" இலிருந்து மீள்விக்கப்பட்டது