பக்கம்:நித்திலவல்லி.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

177

அதிகமாகச் சொந்த முறையிலும் கூட ஒருவரம் வேண்டலாம் என்று தோன்றுகிறது.”

இதன் அர்த்தத்தை உள்ளூற உணர்ந்து அவன் புன்னகை பூத்தான்.

பல்லக்கில் ஏறுவதற்கு முன் அவனை அவள் கேட்டாள்:

“இன்றும் நான் திரும்பி வந்த பின்பு நீங்கள் என்னைக் கோபித்துக் கொள்வீர்கள். என் மாளிகையிலிருந்து உடனே வெளியேறி விடுவதாகப் பயமுறுத்துவீர்கள்.”

“உனக்கு ஏன் மீண்டும் அப்படி ஒரு கற்பனை?”

“கற்பனையில்லை-மெய்யாகவே நீங்கள் அப்படிக் கோபித்துக் கொண்டால்தான் நான் பாக்கியம் செய்தவளாவேன்...”

“அது எப்படி?”

“நீங்கள் கோபித்துக் கொண்டால்தான் இன்றும் உங்கள் பாதங்களை தீண்டிப் பொறுத்தருளும்படி வேண்டிக் கொள்ள நான் வாய்ப்புப் பெறுவேன். இல்லையானால் உங்களை நான் வேறெப்படி அருகில் நெருங்கவும் வணங்கவும் தீண்டவும் முடியும்?”

அவளுடைய இந்தச் சொற்கள் அவனை மிகவும் நெகிழச் செய்தன. ஒரு புதிய உணர்வின் சிலிர்ப்பில் இந்தச் சமர்ப்பணத்தை எப்படி எந்தச் சொற்களைக் கூறி உபசரித்துத் தனக்குள் ஏற்பதென்ற சிந்தனையில் ஓரிரு கணங்கள் அவனுக்குப் பொருத்தமான பதில்களே கிடைக்கவில்லை.

பல்லக்கில் ஏறுமுன் சாகஸமான சொற்களின் உரிமைக் காரியாகிய அவள் கூடச் சொற்களின் எல்லைக்கு அப்பால் போய் விழிகளில் நீர் மல்க இருப்பதை அவனும் கண்டான். அவளுடைய அந்தக் கண்ணீரைச் சொற்களால் உபசரிப்பதா, உணர்வினால் ஏற்பதா என முடிவு செய்யவே இயலாமல் சில கணங்கள் திகைத்தான் அவன்.


நி.வ - 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/178&oldid=715371" இலிருந்து மீள்விக்கப்பட்டது