பக்கம்:நித்திலவல்லி.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

17


பேச்சுக் கொடுத்தால் இவளிடமிருந்து தெரிந்து கொள்ள முடியுமென்று அவனுள் நம்பிக்கை பிறந்தது. சிறிய நேரப் பேச்சிலேயே அவள் ஊர்க் கோடியில் உள்ள கொற்றவை கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றச் செல்கிறாள் என்று அறிய முடிந்தது. அவனுக்கு எது வேண்டுமோ அதைத் தவிர மற்றவற்றை எல்லாம் பேசினாள் அந்தப் பெண்.

“ஒரு மண்டலத்துக்குக் கொற்றவை கோவிலில் நெய் விளக்கு ஏற்றுவதாக வேண்டுதல்” என்று அவள் கூறிய போது அவன் சிரித்துக்கொண்டே அவளைக் கேட்டான்;

“பெண்ணே! நான்கூட உங்கள் ஊர்க் கொற்றவையிடம் ஒரு வேண்டுதல் செய்து கொள்ளலாம் என்று பார்க்கிறேன்! வேண்டிக்கொள்ளட்டுமா?”

“என்ன வேண்டுதலோ அது?”

“வழிதெரியாமல் மயங்குகிறவர்களுக்கு வழி சொல்லும் நல்லறிவை இந்த ஊர்க்காரர்களுக்குக் கொடு என்று வேண்டிக் கொள்ளப் போகிறேன்.”

‘'நல்லறிவு இந்த ஊராருக்கு வேண்டிய மட்டும் இருக்கிறது. சொல்லப் போனால் உங்களுக்குத்தான் இப்போது அது இருப்பதாகத் தெரியவில்லை.”

இந்த மறுமொழிக்குப் பின் அவன் அவளோடு உரையாடலை நிறுத்தி விட்டான். அவன் முகத்தில் மலர்ச்சி மறைந்து விட்டதை அவளும் கண்டு கொண்டாள். இதன்பின் கொற்றவை கோவில்வரை அவர்கள் பேசிக் கொள்ள வில்லை. அவள் நெய் விளக்கு ஏற்றினாள். அவன் கொற்றவையை வணங்கினான். அந்த வணக்கத்துக்கு உடனே பயன் கிடைத்தது. அவன் மேல் அவளுக்கு இரக்கம் வந்திருக்க வேண்டும். அவள் அவனைக் கேட்டாள்:

“இப்போது இந்த இடத்தில் கொற்றவை சாட்சியாக எனக்கு ஒரு வாக்குக் கொடுத்தால் உங்களுடைய வினாவுக்கு நான் மறுமொழி கூறலாம்.”

“என்ன வாக்கு அது?”

நி.வ - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/18&oldid=715907" இலிருந்து மீள்விக்கப்பட்டது