பக்கம்:நித்திலவல்லி.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

181



கொண்டிருந்தான். எதிர்ப்புறம் கட்டிலில் படுத்தபடியே முகத்தைத் திருப்பி இளையநம்பியை நோக்கிப் புன்னகை பூத்தான், தேனூர் மாந்திரீகன். ‘அவர்கள் இருவரும் கேட்க நேரும்படி கனவில் அரற்றி விட்டோமே’ என்பதை எண்ணி நாணினான். அவன் மீண்டும் விழித்த நிலையில் நினைவு கூட்ட முயன்ற போது, அந்தக் கனவும் காட்சிகளும், வார்த்தைகளும் தொடர்பின்றி இருந்தன.

இளையநம்பி உறக்கத்தில் வாய் அரற்றியதும், அழகன் பெருமாள் அவனை எழுப்பி விட்டாலும், மஞ்சத்திலிருந்து உடனே எழவில்லை அவன். கண்களை மூடியபடியே உடற் சோர்வு நீங்கி மஞ்சத்திற் சாய்ந்திருந்தான் அவன். இதைக் கண்டு அவன் மீண்டும் உறங்கிவிட்டதாக எண்ணிக் கொண்ட அழகன் பெருமாள்,

“செங்கணான்! யார் எழுப்பினாலும் எழுந்திருக்க முடியாதபடி திருக்கானப்பேர் நம்பிக்கு ஆழ்ந்த உறக்கம் போலிருக்கிறது”, என்று கூறியபடியே தேனூர் மாந்திரீகனிடம் மீண்டும் உரையாடப் போய் அமர்ந்தான். இதைக் கேட்டு மஞ்சத்தில் விழிகளை மூடியவாறு படுத்திருந்த இளைய நம்பி உள்ளூற நகைத்துக் கொண்டான். தான் உறங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதைக் கேட்க ஆவலாக இருந்தது இளையநம்பிக்கு. உறங்குகிற பாவனையிலேயே தொடர்ந்து கண்களை மூடியபடி மஞ்சத்தில் கிடந்தான் அவன்.

அங்கே அழகன்பெருமாளுக்கும், செங்கணானுக்கும் உரையாடல் தொடங்கியது. முதலில் அழகன்பெருமாள்தான் செங்கணானிடம் வினாவினான்:-

“செங்கணான்! காரியம் காயா, பழமா?”

“பழமாகும் என்றுதான் நினைத்தோம். ஆனால் காலம் மாறிப் போய்ச் சூழ்நிலையும் ஒத்து வராததால் அது கனியவில்லை! வெறும் காய்தான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/182&oldid=945290" இலிருந்து மீள்விக்கப்பட்டது