பக்கம்:நித்திலவல்லி.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

நித்திலவல்லி / முதல் பாகம்



அருளும் தெய்வீகப் பயனை இந்தத் திருத்துழாய் மாலை தங்களுக்குத் தரும்’ என்று அந்துவனார் கூறினார். அவருடைய வேண்டுகோளின்படி இந்தத் திருத்துழாய் மாலையைத் தங்களிடம் சேர்க்க வந்தேன்’ என்று கூறி மாலையை உடனே என் கையிலிருந்த குடலையில் திணித்துவிட்டு அந்த மாலை கட்டி விரைந்து நந்தவனப் பகுதியில் புகுந்து மறைந்து விட்டான். அவனை ஏதாவது கேட்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் மின்னலாக மறைந்து விடவே எனக்குத் திகைப்பாயிருந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை. கோயிலிலிருந்து வெளியே வந்ததும், பல்லக்கில் அமர்ந்து மாலையைக் கை விரல்களால் நன்கு ஆராய்ந்தும், எதுவும் புலப்படவில்லை. இந்த மாலையைக் கொடுத்து அனுப்பியதன் மூலம் அந்துவன் நமக்கு என்ன தெரிவிக்கிறான் என்பதே எனக்குப் புரியவில்லை. மாலை இதோ இருக்கிறது” என்று அந்த மாலையை அவள் எடுத்து நீட்டுவதற்கு முன்பே விரைந்து அதைத் தன் கைகளில் ஏற்றான் அழகன்பெருமாள். மாலையை மேலிருந்து கீழாகத் தொங்கவிட்டபோது ஒரு பெரிய தேங்காயளவு அதன் நுனியில் தொங்கிய திருத்துழாய்க் குஞ்சம் அவன் கவனத்தைக் கவர்ந்தது.

அழகன்பெருமாள் நிதானமாகக் கீழே தரையில் அமர்ந்து, மாலையை மடியில் வைத்துக் கொண்டு அதன் குஞ்சத்தை மெல்லப் பிரித்தான். எல்லார் விழிகளும் வியப்பால் விரிந்தன.

என்ன விந்தை? அந்தக் குஞ்சத்தின் நடுப்பகுதியில் இருந்து ஒடியாமல் சுருட்டப்பட்டு நாரால் கட்டியிருந்த ஒலைச்சுருள் ஒன்று வெளிப்பட்டது. எல்லார் கண்களிலும் மலர்ச்சி தெரிந்தது.

“பெருமாளின் திருவருள் இதோ கிடைத்து விட்டது! அந்துவன் பொய் சொல்ல மாட்டான்” என்று கூறியபடியே அந்த ஓலைச்சுருளை எடுத்துப் பிரித்தான் அழகன் பெருமாள். ஒடியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நன்கு முற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/187&oldid=945287" இலிருந்து மீள்விக்கப்பட்டது