பக்கம்:நித்திலவல்லி.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


33. அடிமையும் கொத்தடிமையும்

தாகத்தோடு பருகுவதற்குக் கையில் எடுத்த நீரைப் பருக முடியாமல் மறித்துப் பறித்தது போல் அரிய செய்திகள் அடங்கிய ஓலையைப் படிப்பதற்குள் விளக்கு அவிந்ததன் காரணமாக அவர்களது ஆவலும் பரபரப்பும் அதிகரித்திருந்தன. பணிப்பெண் அவிந்த கைவிளக்கை உள்ளே எடுத்துச் சென்று ஏற்றி வந்தாள். விளக்கு மீண்டும் அவிந்து விடலாகாதே என்ற கவலையில் அனைவரையும் விலகி நிற்குமாறு வேண்டிய பின் ஓலையில் எழுதப்பட்டிருந்த இரண்டாவது வாக்கியத்தைப் படிக்கலானான் இளையநம்பி:-

‘தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் சிறை மீட்க எல்லா வகையிலும் முயலுக!’

இந்த இரண்டாவது வாக்கியத்தின் பொருளை இதிலுள்ள சொற்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சி எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது என்னும் சூழ்நிலை புரியவில்லை.

மூன்றாவது வாக்கியத்தோடு அந்த ஓலையில் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் முடிந்து விட்டன. மூன்றாவது வாக்கியம்: ‘திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரன் இளையநம்பி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்று தன்னைப் பற்றியே இருந்ததனால் அதை அவன் வாய்விட்டுப் படிக்கவில்லை. அப்படியே ஓலையை அழகன் பெருமாளிடம் கொடுத்து விட்டான். அவன் வாக்கியங்கள் மூன்றும் முடிந்த பின் செய்திகளை நம்புவதற்கு ஒரு நல்லடையாளமாகக் கயல் என்றும் அதில் கீழே எழுதியிருந்ததை அவன் காணத் தவறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/189&oldid=715378" இலிருந்து மீள்விக்கப்பட்டது